பிட்காயின் மோசடி வழக்கு: நடிகை ஷில்பா ஷெட்டி கணவருக்கு எதிராக எந்தவித உறுதியான ஆதாரமும் இல்லை

பிட்காயின் மோசடி வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவுக்கு எதிராக எந்தவித உறுதியான ஆதாரமும் இல்லை என்ற தகவல் வெளிவந்துள்ளது. #BitcoinScam #RajKundra

Update: 2018-06-12 08:10 GMT
மும்பை,

ஆன்லைன் மூலம் ‘பிட்காயின்’ எனப்படும் மெய்நிகர் கரன்சி புழக்கத்தில் உள்ளது. இதில் பலர் முதலீடு செய்து வருகிறார்கள். இந்த பரிமாற்றம் சட்டவிரோதமானது என்று மத்திய அரசு கூறியுள்ளது.

இதற்கிடையே, ‘பிட்காயின்’ முதலீட்டாளர்களிடம் ரூ.2 ஆயிரம் கோடி மோசடி செய்ததாக அமித் பரத்வாஜ் என்பவர் உள்பட 9 பேர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இதுபற்றிய விசாரணையில், நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவுக்கு தொடர்பு இருப்பதற்கான தகவல்கள் வெளியாகின. இதன் அடிப்படையில், ஜூன் 5-ந் தேதி விசாரணைக்கு வருமாறு ராஜ் குந்த்ராவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதை ஏற்று, மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராஜ் குந்த்ரா ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.

இந்நிலையில் மோசடி வழக்கு குறித்து காவல்துறை ஆய்வாளர் மற்றும் சைபர் பிரிவு இன்ஸ்பெக்டர் மனிஷா செண்டே கூறுகையில், ”இந்த மோசடி வழக்கு குறித்து முதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை இந்த வழக்கை சிறந்த முறையில் விசாரித்து வருகிறது” எனக் கூறினார். இதனிடையே கிரிப்டோ நாணய மோசடி வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவுக்கு எதிராக எந்தவித உறுதியான ஆதாரமும் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்