தொடர் சிகிச்சையால் வாஜ்பாயின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது - எய்ம்ஸ் மருத்துவமனை

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். #Vajpayee #AIIMS

Update: 2018-06-12 15:31 GMT


புதுடெல்லி,


பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான வாஜ்பாய் (வயது 93), கடந்த 1998 முதல் 2004–ம் ஆண்டு வரை பிரதமராக பதவி வகித்தார். பின்னர் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் பொதுவாழ்வில் இருந்து அவர் படிப்படியாக விலகினார். நாளடைவில் அவரது நோய் பாதிப்பு தீவிரமடைந்ததால், வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டு இருந்த வாஜ்பாய் நேற்று டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அனைத்து பரிசோதனைகளையும் மேற்கொண்ட மருத்துவர்கள், சிறப்பு வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

வாஜ்பாய், வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரந்தீப் குலேரியா மேற்பார்வையின் கீழ் மருத்துவக்குழுவினர் அவரது உடல்நிலையை கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. மேலும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறினர். முன்னாள் பிரதமர் வாஜ்பாய், எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவலை பா.ஜனதா கட்சியும் வெளியிட்டு இருக்கிறது. வாஜ்பாயை பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் நேரில் சென்று பார்த்தனர், பிற கட்சி தலைவர்களும் அவருடைய உடல் நிலையை தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். 

எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டு உள்ள தகவலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை சீராக உள்ளது. தொடர் சிகிச்சையால் வாஜ்பாயின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மருத்துவக் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்