அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்க மறுத்ததால் நடுரோட்டில் குழந்தை பெற்ற பெண்

அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்க மறுத்ததால் நடுரோட்டில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.

Update: 2018-06-24 00:15 GMT
முசாபர்நகர், 

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் புதானா நகரைச் சேர்ந்தவர் யூசுப். இவருடைய மனைவி பர்சானா (வயது 26). நிறைமாத கர்ப்பிணியான இப்பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அதனால், அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அவரை கணவர் யூசுப் அழைத்து சென்றார்.

ஆனால், பர்சானாவை அங்கு பிரசவத்துக்கு அனுமதிக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. அதையடுத்து மற்றொரு ஆஸ்பத்திரியில் சேர்க்க பர்சானாவை யூசுப் அழைத்து சென்றார். போகும் வழியிலேயே நடுரோட்டில் பர்சானாவுக்கு குழந்தை பிறந்து விட்டது. அவர் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

அதற்குள், சம்பவம் குறித்து யாரோ அவசர போலீசுக்கு தகவல் கொடுத்ததால், போலீசார் வந்தனர். பர்சானாவை மீண்டும் அதே ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கூட்டிச் சென்றனர். மறுபடியும் அவரை அனுமதிக்க மறுத்ததால், உறவினர்கள் போராட்டத்தில் குதித்தனர். சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி மிஸ்ரா கூறினார்.

மேலும் செய்திகள்