ஆந்திராவில் ‘புதுமனை புகுவிழா’ திட்டத்தில் 3 லட்சம் ஏழைகளுக்கு வீடு: சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்

ஆந்திராவில் ‘புதுமனை புகுவிழா’ திட்டத்தில் 3 லட்சம் ஏழைகளுக்கு வீடு வழங்கும் திட்டத்தை சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்.

Update: 2018-07-06 23:00 GMT
விஜயவாடா, 

ஆந்திர மாநில அரசு ஏழைகளுக்காக ‘புதுமனை புகுவிழா’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின்படி வீடுகள் இல்லாத ஏழை குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் கட்டி கொடுக்கப்படுகிறது. இதன்படி 3 லட்சம் பேருக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.

ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, விஜயவாடாவில் உள்ள இந்திரா காந்தி முனிசிபல் அரங்கில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற விழாவில் வீட்டு வசதி திட்டத்தை தொடங்கி வைத்தார். ‘புதுமனை புகுவிழா’ திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவது குறித்து வீட்டு வசதி திட்ட இயக்குனர்களுடன், ஊரக வீட்டு வசதி, தகவல் மற்றும் மக்கள் தொடர்புத்துறை மந்திரி கலவ ஸ்ரீநிவாசலு கலந்தாய்வு நடத்தினார்.

இதையடுத்து மந்திரி கலவ ஸ்ரீநிவாசலு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மாநிலத்தின் 174 தொகுதிகளில் உள்ள 12 ஆயிரத்து 767 கிராம பஞ்சாயத்துகள், 664 மண்டலங்கள் மற்றும் 110 நகராட்சிகளை உள்ளடக்கிய 2 ஆயிரத்து 93 நகராட்சி வார்டுகள் ஆகியவற்றில் புதுமனை புகுவிழா திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 2019-ம் ஆண்டுக்குள் 10 லட்சம் வீடுகள் கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் வீட்டு வசதி திட்டங்களில் வெளிப்படையான தன்மையுடன் இருப்பதை உறுதி செய்யும் வகையில், பயனாளிகளின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக பணம் செலுத்தப்படும். வீட்டு வசதி திட்டத்தை மக்களுக்கு எளிதாக வழங்குவதற்கான பல விதிகளை அரசு தளர்த்தியதோடு, கூடுதல் நிதி உதவிகளையும் அளித்திருக்கிறது.

இவ்வாறு கலவ ஸ்ரீநிவாசலு கூறினார்.

மேலும் செய்திகள்