பி.என்.பி மோசடி: சிங்கப்பூர் சென்றனர் அமலாக்கத்துறையினர், நிரவ் மோடியை கைது செய்ய தீவிரம்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்த தப்பிச்சென்ற நிரவ் மோடியை கைது செய்ய அமலாக்கத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். #PNBscam # NiravModi

Update: 2018-07-17 01:50 GMT
சிங்கப்பூர்,

பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்‌ஷியும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000  கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்தது சமீபத்தில் தெரியவந்தது. இருவரும் இந்தியாவைவிட்டு வெளியேறிவிட்டனர்.  வங்கி மோசடி தொடர்பாக சிபிஐ, அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறை உள்ளிட்ட விசாரணை முகமைகள் விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

இந்த விவகாரத்தில் நீரவ் மோடியின் உறவினர் மெகுல் சோக்சி, சகோதரர் நிஷால் மோடி, நிரவின் மனைவி ஆமி மோடி, ஊழியர் சுபாஷ் பராப் ஆகியோருக்குத் தொடர்பு இருப்பதாக புகார் எழுந்தது. அவர்கள் அனைவரும் இந்தியாவில் இருந்து தப்பிச்சென்றுவிட்டனர். அவர்கள் பிரிட்டன், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் இருப்பதாகத் தெரிகிறது. 

இதுதொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தனித்தனியே வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக நிரவ் மோடி உள்ளிட்டோருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸை (தேடப்படும் நபர்கள்) பிறப்பிப்பதற்காக சர்வதேச போலீஸாரின் (இன்டர்போல்) உதவியை சிபிஐ நாடியது. அதன் அடிப்படையில் கடந்த 29-ஆம் தேதி அந்த நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், நிரவ் மோடியை தேடிப் பிடிக்க 3 பேர் கொண்ட அமலாக்கத் துறை சிறப்புக் குழு சிங்கப்பூர் விரைந்துள்ளது. வழக்கு தொடர்பான விவரங்களை அந்நாட்டு அரசுடன் அக்குழு பகிர்ந்து கொள்ள உள்ளதாகவும், அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பாக ஆலோசிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் செய்திகள்