மோடி கூட்டத்தில் கூடாரம் சரிந்த விவகாரம்: அறிக்கை அளிக்குமாறு மே.வங்க அரசுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு

மோடி கூட்டத்தில் கூடாரம் சரிந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு மேற்கு வங்க அரசுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. #MHA

Update: 2018-07-17 02:25 GMT
புதுடெல்லி,

மேற்கு வங்காளத்தின் மிட்னாப்பூரில் நேற்று பா.ஜனதா சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடந்தது. பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டம் என்பதால், இதற்காக இரும்பு தூண்களுடன் மிகப்பெரிய கூடாரம் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றிய போது பலத்த மழை பெய்தது. ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் பிரதமரின் உரையை ஏராளமானோர் கேட்டுக்கொண்டு இருந்தனர். அப்போது சிலர் பிரதமரை தெளிவாக பார்ப்பதற்காக கூடாரத்துக்கு போடப்பட்டு இருந்த இரும்பு கட்டுமானத்தின் மீது ஏறி நின்றனர்.

இதை கவனித்த பிரதமர் மோடி, அவர்களிடம் கீழே இறங்குமாறு அடிக்கடி கூறிக்கொண்டே இருந்தார். ஆனால் அதற்கு செவிமடுக்காத அவர்கள், தொடர்ந்து இரும்பு தூண்களிலேயே நின்றிருந்தனர். இதனால் பாரம் தாங்காமல் கூடாரத்தின் ஒருபகுதி திடீரென சரிந்து விழுந்தது. கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்ததால், தூண்களின் பிடிமானம் தளர்ந்து இருந்ததாக தெரிகிறது. கூடாரம் சரிந்ததால் கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மக்கள் அங்கும், இங்குமாறு அலறியடித்து ஓடினர். இதனால் அங்கே லேசான நெரிசலும் ஏற்பட்டது.

இதில் கம்பிகள் விழுந்தும், நெரிசலில் சிக்கியுமாக 67 பேர் காயமடைந்தனர். அதில் சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மிட்னாப்பூர் மருத்துவக்கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கூடாரம் சரிந்து காயமடைந்தவர்களை பார்ப்பதற்காக பிரதமர் மோடி உடனே மருத்துவமனைக்கு விரைந்தார். 

அங்கு அவர், காயமடைந்தவர்களை பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.  இந்த நிலையில், மேற்கூறிய விவகாரம்  தொடர்பாக மாநில அரசிடம் உள்துறை அமைச்சகம் விளக்க அறிக்கை கேட்டுள்ளது. இதற்கிடையே, கூடாரம் சரிந்த விவகாரத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ள மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ், நிகழ்ச்சி பொறுப்பாளர்களே இந்த சம்பவத்துக்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளது. 

மேலும் செய்திகள்