மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி: அரசுக்கு ஆதரவு-325; எதிர்ப்பு-126

நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. அரசுக்கு ஆதரவாக 325 வாக்குகளும், எதிராக 126 வாக்குகளும் கிடைத்தன.

Update: 2018-07-21 00:00 GMT
புதுடெல்லி, 

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசு மீது முதன் முதலாக நேற்று காலை நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

பாரதீய ஜனதாவின் தோழமை கட்சியான 18 உறுப்பினர்களை கொண்ட சிவசேனா நேற்று நாடாளுமன்றத்துக்கு வராமல் புறக்கணித்தது.

சபை கூடியதும் தெலுங்கு தேசம் உறுப்பினர் சீனிவாஸ் கேசினேனி நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தாக்கல் செய்தார். அப்போது பிஜூ ஜனதாதள உறுப்பினர்கள் 20 பேரும், மத்திய அரசு ஒடிசாவுக்கு அநீதி இழைப்பதாக கூறி சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

அதன்பிறகு தெலுங்கு தேசம் உறுப்பினர் ஜெயதேவ் கல்லா விவாதத்தை தொடங்கி வைத்து பேசினார்.

அதன்பிறகு பாரதீய ஜனதா, காங்கிரஸ், அ.தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்களும் பேசினார்கள்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில் பிரதமர் மோடியையும், மத்திய அரசையும் கடுமையாக சாடினார்.

அ.தி.மு.க. உறுப்பினர் கே.கே.வேணுகோபால் பேசுகையில், இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் தேவையற்றது என்றும், பாரதீய ஜனதா கூட்டணி அரசு தனது 5 ஆண்டு பதவி காலத்தை நிறைவு செய்ய அனுமதிக்கவேண்டும் என்றும் கூறினார்.

இறுதியில் விவாதத்துக்கு பதில் அளித்து பேசிய பிரதமர் மோடி, நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நிராகரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்

அவர் பேசி முடித்ததும், இரவு 11.10 மணிக்கு நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது.

இதில் தீர்மானத்துக்கு ஆதரவாக (அரசுக்கு எதிராக) 126 பேர் வாக்களித்தனர். தீர்மானத்துக்கு எதிராக (அரசுக்கு ஆதரவாக) 325 பேர் வாக்களித்தனர். இதனால் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் 199 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.

மேலும் செய்திகள்