கள்ள உறவு பற்றிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

திருமணம் ஆன ஆண்–பெண் கள்ள உறவு பற்றிய வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது.

Update: 2018-08-09 23:30 GMT

புதுடெல்லி,

இத்தாலியில் வசிக்கும் இந்தியரான ஜோசப் ஷைன் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் திருமணம் ஆன ஆண்–பெண் இடையேயான கள்ள உறவில் ஆணுக்கு மட்டும் தண்டனை விதிக்க வகை செய்யும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 497–வது பிரிவு குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். மேலும் இந்த சட்டப்பிரிவை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்றும் அவர் அதில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமன், ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தி வந்தது.

நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த் தனது வாதத்தில், ‘‘திருமணம் ஆன ஆண்–பெண் இடையேயான கள்ள உறவு திருமண பந்தத்தின் புனிதத்தை அழித்து விடும் என்பதை மனதில் கொண்டு இந்த தண்டனைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதுபோன்ற கள்ள உறவு திருமணத்தின் புனிதத்துக்கு அச்சுறுத்தலாகவும் உள்ளது. வெளிநாட்டு கலாசாரத்துடன் இதை தொடர்புபடுத்துவது சரி அல்ல. இது இந்திய சமூக சூழ்நிலையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. எனவே இந்த தண்டனை சட்டம் தொடர வேண்டும்’’ என்று வாதிட்டார்.

அப்போது நீதிபதிகள் அமர்வு, பெண்ணின் கணவரின் சம்மதத்துடன் இதுபோன்ற உறவு நடந்து அது கள்ள உறவு இல்லை என கூறப்படும் என்றால் திருமணத்தின் புனிதம் என்னவாகும்? இது பொதுவில் நல்லதுதானா? என்று கருத்து தெரிவித்தது.

இந்த வழக்கில் நேற்றுடன் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்தன. இதைத் தொடர்ந்து வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்