டெல்லி விமான நிலையத்தில் 24 கிலோ போதைப்பொருள் பறிமுதல்

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பயணிகளை சோதனையிடும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

Update: 2018-08-12 22:01 GMT

புதுடெல்லி,

வெளிநாட்டு பயணி ஒருவரின் பைகளை சோதித்தபோது, அவற்றில் கிரிக்கெட் வீரர்கள் தொடையில் அணியும் 46 பட்டைகள் இருந்தன.

அவற்றை எடுத்து பார்த்த போது அவை வழக்கத்துக்கு மாறாக அதிக எடையுடன் இருந்தன. இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அந்த பட்டைகளை கிழித்து பார்த்தனர். அப்போது அவற்றில் சியுடோபெட்ரின் எனப்படும் போதைப்பொருள் சிறிய பிளாஸ்டிக் பைகளில் மடித்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு மொத்தம் 24 கிலோ அளவுக்கு இந்த போதைப்பொருள் இருந்தது.

இதைத்தொடர்ந்து உயர் அதிகாரிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே அவர்கள் அங்கு வந்து அந்த போதைப்பொருளை கைப்பற்றி, அதை கொண்டு வந்த நபரிடம் விசாரணை நடத்தினர்.

இதில் அவரது பெயர் ரோட்ஜர்ஸ் சிலாவ்வே என்பதும், அவர் ஜாம்பியா நாட்டை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அவர் மும்பை வழியாக எத்தியோப்பியாவுக்கு செல்ல திட்டமிட்டு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்