2 மாத கால அமர்நாத் யாத்திரை நிறைவு

2 மாத கால அமர்நாத் யாத்திரை நிறைவு அடைந்தது. 2 லட்சத்து 85 ஆயிரம் பக்தர்கள் பனிலிங்கத்தை தரிசனம் செய்தனர்.

Update: 2018-08-26 21:45 GMT

ஸ்ரீநகர்,

இந்துக்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது மேற்கொள்ள விரும்பும் புனிதப்பயணங்களில் முக்கியமானது, அமர்நாத் யாத்திரை ஆகும். ஒவ்வொரு ஆண்டும் 2 மாத காலம் அமர்நாத் யாத்திரை நடைபெறுவது வழக்கம்.

காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் இருந்து சுமார் 150 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ள குகைக்கோவில் அமர்நாத். 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில் உருவாகிற பனிலிங்கத்தை தரிசிப்பதில் இந்துக்கள் ஆர்வம் கொண்டு உள்ளனர். குறிப்பிட்ட மாதங்களில் மட்டுமே பனி லிங்கத்தை தரிசிக்க முடியும்.

இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை கடந்த ஜூன் மாதம் 28–ந் தேதி தொடங்கியது. 2 மாத காலம் நீடித்தது. நேற்று நிறைவுக்கு வந்தது.

இந்த ஆண்டு குகைக்கோவிலில் உருவான பனிலிங்கத்தை, மிகக் கடினமான பயணத்துக்கு பின்னர் 2 லட்சத்து 85 ஆயிரம் பக்தர்கள் பக்திப்பெருக்குடன் தரிசித்தனர்.

அமர்நாத் யாத்திரையின் கடைசி நாளான நேற்று அமர்நாத் புனித தல வாரியத்தின் கூடுதல் தலைமை செயல் அதிகாரி பூபிந்தர் குமார், காந்தர்பால் துணை கமி‌ஷனர் பியூஷ் சிங்கலா ஆகியோர் பனி லிங்க தரிசனம் செய்தனர். நாட்டின் நீடித்த அமைதி, நல்லிணக்கம், முன்னேற்றம், வளம் ஆகியவற்றுக்காக அவர்கள் பிரார்த்தனை செய்தனர்.

இந்த தகவலை காஷ்மீர் கவர்னர் மாளிகை மக்கள் தொடர்பு அதிகாரி வெளியிட்டார்.

மேலும் குகைக்கோவிலில் முகாம் இயக்குனர்கள், கூடுதல் இயக்குனர்கள், பிற அதிகாரிகளை சந்தித்து அமர்நாத் புனித தல வாரியத்தின் கூடுதல் தலைமை செயல் அதிகாரி பூபிந்தர் குமார் உரையாடினார். அங்கு மேற்கொள்ளப்படுகிற சுகாதாரப்பணிகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

மேலும் செய்திகள்