பாலாறு தடுப்பணை உயரத்தை அதிகரிக்கும் விவகாரம்: தமிழக அரசின் வழக்கில் ஜனவரி முதல் தொடர்ந்து விசாரணை

பாலாறு தடுப்பணை உயரத்தை அதிகரிக்கும் விவகாரத்தில், தமிழக அரசின் வழக்கு மீது ஜனவரி முதல் தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது.

Update: 2018-09-04 23:00 GMT

புதுடெல்லி,

தமிழகம், ஆந்திர எல்லைப் பகுதியில் சித்தூர் மாவட்டம் பெரும்பள்ளம் கிராமத்தில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு உள்ளது. இதன் உயரத்தை 5 அடியில் இருந்து 12 அடியாக அதிகரிக்கும் ஆந்திர மாநில நீர்ப்பாசனத் துறையின் நடவடிக்கைக்கு எதிராக தமிழக அரசு கடந்த 2016–ம் ஆண்டில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்தது.

அந்த வழக்கில் கூறி இருப்பதாவது:–

தமிழகம், ஆந்திரா ஆகிய 2 மாநிலங்களுக்கு இடையே ஓடும் பாலாறு, 1892–ம் ஆண்டு உருவாக்கப்பட்ட மெட்ராஸ்–மைசூர் ஒப்பந்தத்தின் ‘ஏ’ பிரிவு பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள ஆறுகளில் ஒன்று. இந்த ஒப்பந்தத்தின் இரண்டாம் பிரிவில், நதி உற்பத்தியாகும் மாநிலம் (ஆந்திரா), அந்த நதியின் நீரை கடைசியாகப் பெறக்கூடிய மாநிலத்தின் (தமிழகம்) முன் அனுமதியைப் பெறாமல், அணைகளையோ, தடுப்புகளையோ, நீரைத்திருப்பும் அல்லது தேக்கிக்கொள்ளும் கட்டுமானங்களையோ கட்டக்கூடாது. அந்த வகையில் 15 ஆறுகள் ‘ஏ’ பிரிவில் பட்டியலிடப்பட்டு உள்ளன.

இந்த சூழ்நிலையில், மெட்ராஸ்–மைசூர் ஒப்பந்தத்தை மீறி சித்தூர் மாவட்டம் பெரும்பள்ளம் கிராமத்தில் பாலாறு ஆற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையை 5 அடியில் இருந்து 12 அடியாக உயர்த்தும் ஆந்திர மாநில அரசின் நடவடிக்கை, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குரியதாக்குகிறது.

எனவே, தமிழக அரசை கலந்து ஆலோசிக்காமல் ஒருதலைப்பட்சமாக ஆந்திர அரசு எடுக்கும் நடவடிக்கை அரசியல் சட்டத்துக்கு எதிரானதாக உள்ளது. அந்த தடுப்பணையின் உயரம் பழைய நிலையில் இருக்கவேண்டும்; கூடுதல் நீரை சேகரிக்கக்கூடாது; தமிழகத்துக்கு வரும் இயல்பான நீரோட்டத்தை உறுதிசெய்ய வேண்டும்; தடுப்பணையின் உயரத்தை எந்த நிலையிலும் உயர்த்தக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இந்த வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

விசாரணை தொடங்கியதும் தமிழக அரசு மற்றும் ஆந்திர அரசு தரப்பில் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு வரும் ஜனவரி மாதம் முதல் தொடர்ச்சியாக விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.

மேலும் செய்திகள்