’தாலி கட்டும் நேரத்தில் கூட வாட்ஸ் ஆப் மெசேஜ்” நொந்து போன மணமகன் குடும்பத்தினர்

தாலி கட்டும் நேரத்தில் கூட மணமகள் வாட்ஸ் ஆப்-பே கதி என்று இருந்ததால் மணமகன் குடும்பத்தினர் திருமணத்தை நிறுத்தி உள்ளனர்.

Update: 2018-09-09 10:08 GMT
லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஷா மாவட்டத்தில் உள்ள நவ்கோயன் சதன் கிராமத்தை சேர்ந்தவர் உரோஜ் மெகந்தி. இவரது மகளுக்கும் பகீர்புரா என்ற ஊரில் உள்ள கமர் ஹதர் என்பவரது மகனுக்கு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் பேசி  முடிக்கப்பட்டது. அதன்படி கடந்த 5-ம் தேதி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அன்று மணமகள் வீட்டில் திருமணத்திற்காக அனைவரும் தயார் நிலையில் இருந்துள்ளனர். முகூர்த்த நேரம் நேரம் நெருங்கி கொண்டிருந்தது.

மணமகன் வீட்டில் இருந்து ஒருவர் கூட வரவில்லை இதனால் பதற்றம் அடைந்த பெண் வீட்டார் மணமகன் வீட்டாருக்கு போன் செய்தனர். அப்போது அவர்கள் அளித்த பதில் பெண் வீட்டாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில் திருமணத்தை நிறுத்தி விடுங்கள் உங்க பெண் எப்பொழுதும் வாட் ஆப்-பே கதி என்று மூழ்கி கிடக்கிறார். 

இப்ப கூட எங்களுக்கு வாட்ச் ஆப்பில் மெசேஜ் அனுப்பி இருக்கிறார். இது எங்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. எனக்கூறி போனை வைத்து விட்டனர். செய்வது அறியாது சோகத்தில் மூழ்கி போன பெண் வீட்டார் மணமகள் குடும்பத்தினர் மீது போலீசில் புகார் அளித்தனர். 

அதில் வரதட்சணை ரூ. 65 லட்சம் கொடுத்தால் தான் மணமகள் கழுத்தில் தாலி கட்டுவதாக கூறி திருமணத்தை மணமகன் வீட்டார் நிறுத்தி விட்டனர் என கூறியுள்ளனர்.

இது குறித்து மணப்பெண்ணின் தந்தை உரோஜ் மெகந்தி கூறுகையில், 

திருமணத்திற்காக உறவினர்கள் எல்லாரும் வந்து இருந்தனர். இந்த நிலையில் மணமகன் வீட்டில் இருந்து யாரும் வரவில்லை. நான் போன் செய்து கேட்டேன். அப்போது தான் திருமணத்தை நிறுத்திவிட்டதாக கூறினர். இது எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்தது என்றார்.

இது குறித்து அம்ரோஷா மாவட்ட எஸ்.பி கூறுகையில், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தியதில்  ‘மணமகள் வாட்ஸ் ஆப் -பை அதிகமாக பயன்படுத்தும் பழக்கம் கொண்டவர் என்பது தெரிய வந்தது. தாலி கட்டும் நேரத்தில்  கூட மாமனார்-மாமியாருக்கு மெசேஜ் அனுப்பி உள்ளார். மணப்பெண் எப்போதும் வாட்ஸ் ஆப்பில் இருப்பது பிடிக்காமல் தான் திருமணத்தை நிறுத்தி விட்டனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்