தேசிய செய்திகள்
ஐதராபாத் நிஜாம் மியூசியத்தில் தங்க டிபன் பாக்ஸை திருடிய திருடர்கள் சிக்கினர்

ஐதராபாத் நிஜாம் மியூசியத்தில் தங்க டிபன் பாக்ஸை திருடிய திருடர்களை போலீஸ் கைது செய்துள்ளது.

ஐதராபாத், 

ஐதராபாத் மியூசியத்தில் நிஜாமின் விலைமதிப்பற்ற கற்கள் பதித்த தங்க டிபன் பாக்ஸ், நவரத்தின கற்கள் பதிக்கப்பட்ட குவளை மற்றும் கிண்ணம், தங்க ஸ்பூன் போன்ற பொருட்கள் திருட்டுபோனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

மியூசியத்தின் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி ஜன்னலை உடைத்துக் கொண்டு திருடர்கள் உள்ளே இறங்கி திருட்டை நிகழ்த்தியிருக்க வாய்ப்பிருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மியூசியத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவில் சிக்காமல் மிக சாமர்த்தியமாக திருடியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. இப்போது திருட்டு தொடர்பாக போலீஸ் கவுஸ் பாஷா (வயது 23), முகமது முபின் (வயது 24) என இருவரை கைது செய்துள்ளது. வென்டிலேட்டர் வழியாக உள்ளே நுழைந்து திருடியது தெரியவந்துள்ளது.

அவர்கள் மியூசியத்தில் தங்கத்தால் ஆன உறையுடன் கூடிய குரான் புத்தகத்தையும் எடுத்து செல்ல திட்டமிட்டுள்ளனர். அதிகாலை நேரத்தில்  திருடியபோது அருகில் இருந்த பள்ளி வாசலில் இருந்து பாங்கு ஓதும் சத்தம் கேட்டதால் மனதை மாற்றிக் கொண்டு திருடவில்லை. மும்பை சென்ற அவர்களால் விலை உயர்ந்த பொருட்களை விற்பனை செய்ய முடியவில்லை. இந்நிலையில் போலீஸ் அவர்களை கைது செய்துள்ளது. மியூசியத்தில் இருந்த ஒரு சிசிடிவி கேரமாவில் மட்டும் இருவரும் பதிவாகியுள்ளனர். மற்ற எதிலும் அவர்கள் சிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.  திருடப்பட்ட பொருட்களின் துபாய் மதிப்பு ரூ. 30 கோடியை தாண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர். 

4 கிலோ தங்கத்தால் செய்யப்பட்ட டிபன் பாக்ஸை நிஜாம் கூட இப்படி பயன்படுத்தியிருக்கமாட்டார் என குறிப்பிட்ட போலீஸ், திருடர்களின் ஒருவன், தினந்தோறும் தங்க டிபன் பாக்ஸில் உணவு சாப்பிட்டுள்ளான் என கூறியுள்ளனர். பல முயற்சிகளை மேற்கொண்டும் டிபன் பாக்ஸை விற்பனை செய்ய முடியாததால் இங்கு திரும்பியுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளனர். இதுதொடர்பாக முழு விசாரணை நடைபெற்று வருகிறது.