9 ஆண்டுகளாக வாக்களிக்க முடியாமல் தவிக்கும் கேரள பெண்: காரணம் என்ன?

3-வது முறையாக வாக்குரிமை மறுக்கப்பட்டதால் உஷா கவலை அடைந்துள்ளார்.

Update: 2024-04-26 11:48 GMT

திருவனந்தபுரம்

கேரளாவில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். இந்தநிலையில், ஷொர்ணாவூர் அருகே உள்ள குருவாயூரப்பன் நகரை சேர்ந்த 62 வயதான உஷா என்பவர் கடந்த 9 ஆண்டுகளாக வாக்களிக்க முடியாமல் தவித்து வருகிறார். அதற்கு காரணம் வாக்களிக்கும்போது அதிகாரிகள் வைக்கும் மை வாக்காளர்கள் ஓட்டளித்துவிட்டார்கள் என்ற அடையாளத்திற்காக தேர்தல் ஆணையம் சார்பில் ஆள்காட்டி விரலில் வைக்கப்படும். சில நாட்களில் தானாக அழிந்துவிடும். ஆனால், உஷாவுக்கு 9 ஆண்டுகளாக மை அழியாமல் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடைசியாக உஷா கடந்த 2016ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் வாக்களித்தபோது அவருக்கு மை வைக்கப்பட்டது. அதன்பிறகு, அந்த மை நீண்ட நாட்களாகியும் அழியாததால் குழப்பமடைந்தார். சோப்பு உள்ளிட்ட எந்த பொருளை பயன்படுத்தியும் மை அழிந்தபாடில்லை. இதனால் 2019ல் நடந்த மக்களவை தேர்தல் மற்றும் 2021ல் நடந்த சட்டசபை தேர்தல்களில் அவர் வாக்களிக்க சென்றபோது, அதிகாரிகள் ஏற்கனவே மை அடையாளம் இருப்பதை பார்த்து அவரை வாக்களிக்க அனுமதி மறுத்துவிட்டனர். இதனால் வருத்தமடைந்த உஷா, இன்றும் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்ற முடியாமல் போனது. வாக்களிக்க ஓட்டுச்சாவடிக்கு சென்றும் தனது வாக்கை செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினார்.

Tags:    

மேலும் செய்திகள்