புரட்டாசி மாத பூஜைக்கு சபரிமலைக்கு வரும் வாகனங்கள் நிலக்கல் வரை மட்டுமே அனுமதி திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் தகவல்

புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலைக்கு வரும் பக்தர்களின் வாகனங்கள் நிலக்கல் வரை மட்டுமே அனுமதிக்கப்படும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பத்மகுமார் கூறினார்.

Update: 2018-09-13 22:00 GMT

திருவனந்தபுரம், 

புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலைக்கு வரும் பக்தர்களின் வாகனங்கள் நிலக்கல் வரை மட்டுமே அனுமதிக்கப்படும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பத்மகுமார் கூறினார்.

மழை வெள்ள சேதம்

கேரளாவில் கடந்த மாதம் (ஆகஸ்டு) பெய்த கனத்த மழையால் பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சபரிமலையின் புனித நகரான பம்பை வரலாறு காணாத வகையில் பாதிக்கப்பட்டது. ஏராளமான கட்டிடங்கள், நடை பந்தல் ஆகியன வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட மணலால் பாலங்கள் மூழ்கின. சபரிமலைக்கு வரும் வாகனங்கள் நிறுத்தப்படும் கில்டாப் மற்றும் திருவேணி ஆகிய பகுதிகளும் சேதம் அடைந்தன.

மண்டல மகரவிளக்கு சீசன் தொடங்க இன்னும் 2 மாதங்களே உள்ளதால் பம்பையை சீரமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. முதல் கட்டமாக பம்பையாற்றில் சுமார் 12 அடி உயரத்திற்கு குவிந்து கிடக்கும் மணலை அகற்றும் பணி நடந்து வருகிறது. இதுவரை ரூ.5 கோடி மதிப்பிலான மண் அகற்றப்பட்டுள்ளது. இந்த மணலை கட்டுமான பணிக்கு பயன்படுத்த திருவிதாங்கூர் தேவஸ்தானம் ஆலோசித்து வருகிறது.

நிலக்கல்

புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகிற 16–ந் தேதி திறக்கப்பட இருக்கிறது. இதையொட்டி பக்தர்களின் தனியார் வாகனங்கள் பம்பை வரை அனுமதிக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது பம்பையை சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதாலும், திருவேணி மற்றும் கில்டாப் பகுதிகள் பலத்த மழையால் சேதம் அடைந்து இருப்பதாலும் அந்த பகுதிகளில் வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக பக்தர்களின் தனியார் வாகனங்கள், நிலக்கல் வரை செல்ல மட்டுமே அனுமதிக்கப்படும். நிலக்கல்லில் இருந்து பக்தர்கள் கேரள அரசு போக்குவரத்து கழகத்தின் சிறப்பு பேருந்துகள் மூலம் பம்பைக்கு அழைத்து செல்லப்படுவார்கள். வாகன நெருக்கடியை தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பத்மகுமார் தெரிவித்து உள்ளார்.

இதற்காக கேரள அரசு போக்குவரத்து கழகத்தின் 60 பஸ்கள் நிலக்கல் – பம்பை இடையே தொடர் சேவை நடத்தும் என்று அவர் கூறினார்.

மேலும் செய்திகள்