ரபேல் விவகாரத்தில் ஊழல் வழக்கு பதிவு செய்ய காங்கிரஸ் வற்புறுத்தல் - மத்திய கண்காணிப்பு ஆணையரிடம் மனு

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக ஊழல் வழக்கு பதிவு செய்யுமாறு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையரிடம் காங்கிரஸ் தலைவர்கள் மனு அளித்தனர்.

Update: 2018-09-24 22:15 GMT
புதுடெல்லி,

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு போடப்பட்ட ஒப்பந்தத்தில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

இந்த ஒப்பந்தத்தில், இந்திய பங்குதாரர் நிறுவனமாக சேர்த்துக்கொள்வதற்கு அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தை தவிர, வேறு ஒரு வாய்ப்பையும் இந்திய அரசு தரவில்லை என பிரான்ஸ் நாட்டின் அப்போதைய அதிபர் ஹாலண்டே சமீபத்தில் கூறினார்.

இதை தீவிரமாக எடுத்துள்ள காங்கிரஸ் கட்சி, இது தொடர்பாக பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும் ரபேல் ஊழல் தொடர்பாக பிரதமரும், ராணுவ மந்திரியும் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கி உள்ளன.

இந்த நிலையில் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் கே.வி.சவுத்ரியை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் நேற்று சந்தித்தனர். அவரிடம், ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக ஊழல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்திய அவர்கள், இது தொடர்பாக விரிவான மனு ஒன்றையும் அளித்தனர்.

இந்த ஊழல் மூலம் அரசு கஜானாவுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், பிரதமரின் வர்த்தக நண்பர்களுக்கு ஆதரவளித்து அரசு நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதன் மூலம் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருப்பதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த குழுவில் காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத், அகமது படேல், ஆனந்த் சர்மா, கபில் சிபல் உள்ளிட்டோர் இடம்பெற்று இருந்தனர். முன்னதாக தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியை (சி.ஏ.ஜி.) கடந்த சில நாட்களுக்கு முன் சந்தித்த காங்கிரஸ் குழுவினர், ரபேல் ஒப்பந்தம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை வெளியிடுமாறு கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே அளித்த பேட்டி அடங்கிய வீடியோவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு இருந்தார். அந்த பேட்டியில் ஹாலண்டே, ரபேல் ஒப்பந்தத்தில் இந்திய பங்குதாரர் நிறுவனமாக ரிலையன்ஸ் நிறுவனத்தை சேர்ப்பதில் பிரான்ஸ் அரசுக்கு எந்த விருப்பமும் இருக்கவில்லை என கூறியுள்ளார்.

இந்த வீடியோவை பகிர்ந்திருந்த ராகுல் காந்தி, ‘இந்தியாவின் திருட்டு தளபதி பற்றிய சோக உண்மை’ என்று தலைப்பும் போட்டிருந்தார். பிரதமர் மோடியைப்பற்றி அவர் மறைமுகமாக இவ்வாறு தாக்கி இருந்ததாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்