“கடன்களால் மூழ்கும் நிறுவனத்தில் எல்.ஐ.சி. பணத்தை முதலீடு செய்வதா?”- பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி பாய்ச்சல்

கடன்களால் மூழ்கும் நிறுவனத்தில் எல்.ஐ.சி. பணத்தை முதலீடு செய்வதற்கு பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-30 23:15 GMT
புதுடெல்லி,

மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிற உள்கட்டமைப்பு குத்தகை மற்றும் நிதி சேவைகள் நிறுவனம் (ஐ.எல். அண்ட் எப்.எஸ்.) கடன்களில் தத்தளிக்கிற நிலையில், இந்த நிறுவனத்தில் பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி.யின் பணத்தை முதலீடு செய்வதாக தெரிகிறது.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை சாடி காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் நேற்று பதிவுகள் வெளியிட்டார். ஒரு பதிவில், “உங்களுக்கு பிடித்தமான தனியார் நிறுவனம் கடன்களால் மூழ்கிக்கொண்டிருக்கிறதே, எல்.ஐ.சி. பணத்தை பயன்படுத்தி அதை ஏன் காப்பாற்ற விரும்புகிறீர்கள்?” என கேட்டுள்ளார்.

இன்னொரு பதிவில், “ எல்.ஐ.சி. என்பது நாட்டின் நம்பிக்கை. மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை அதில் முதலீடு செய்துள்ளனர். நீங்கள் மக்கள் பணத்தை தூக்கிப்போட்டு ஏன் விளையாடுகிறீர்கள்?” என கேள்வி எழுப்பி உள்ளார்.

ஐ.எல்.அண்ட் எப்.எஸ். என்றால் “ஐ லவ் பைனான்சியல் ஸ்கேம்ஸ் பார் யூ” என்று அர்த்தமா?” (ஐ.எல். அண்ட் எப்.எஸ். என்றால் நான் உங்களுக்காக நிதி ஊழல் செய்வதை விரும்புகிறேன் என்று அர்த்தமா?) என்றும் கேட்டுள்ளார்.

குஜராத்தில் மோடி முதல்-மந்திரியாக இருந்தபோது ஐ.எல். அண்ட் எப்.எஸ். நிறுவனத்துக்கு கிப்ட் சிட்டி திட்டத்தை வழங்கியதையும், அந்த திட்டப்பணிகள் எதுவும் நடக்காததையும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

இதுபற்றி அவர் டுவிட்டரில் திரைக்கதை வசனம் போல கருத்து தெரிவித்து கிண்டல் செய்துள்ளார்.


மேலும் செய்திகள்