கங்கையை சுத்தம் செய்யக்கோரி 4 மாதம் உண்ணாவிரதம் இருந்த ஜிடி அகர்வால் உயிரிழப்பு

கங்கையை சுத்தம் செய்யக்கோரி 4 மாதங்கள் உண்ணாவிரதம் இருந்த ஆர்வலர் ஜிடி அகர்வால் உயிரிழந்தார்.

Update: 2018-10-11 11:46 GMT

புதுடெல்லி,


கங்கை நதியை சுத்தம் செய்யும் வகையில் சட்டம் கொண்டுவர வேண்டும்; கங்கோதிரி மற்றும் உத்தரகாசி இடையே கங்கை இடையூறு இன்றி பாய்வதை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்வலர் ஜிடி அகர்வால் 4 மாத காலமாக உண்ணாவிரதம் இருந்தார். 87 வயதான ஜிடி அகர்வால் சுவாமி க்யான் சுவரூப் சதானந்த் என்ற பெயரில் அறியப்பட்டு வந்தவர். 4 மாத காலமாக உண்ணாவிரதம் இருந்த அவரை நேற்று போலீஸ் ஹரிதுவாரில் இருந்து ரிஷிகேஷில் உள்ள ஏய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தது. அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த ஜூலை 22-ல் உண்ணாவிரதம் தொடங்கி அவர் வெறும் தண்ணீர் மட்டும் தேனுடன் கலந்து அருந்தியுள்ளார். தன்னுடைய கோரிக்கையை அரசு நிராகரித்ததால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக அதையும் நிறுத்திவிட்டார். 

ஜிடி அகர்வால் கான்பூர் ஐஐடியில் பேராசிரியராக பயணியாற்றியவர். மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திலும் பணியாற்றியவர். ஏற்கனவே நதிகளை காக்க வேண்டும் என்று உண்ணவிரதம் இருந்தவர். 2009-ம் ஆண்டு அவர் மேற்கொண்ட உண்ணாவிரதம் காரணமாக பகிராதி நதியில் அணை கட்டுவது நிறுத்தப்பட்டது. இந்த தகவலை பதிவிட்டுள்ள வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், “மோடியின் செவுட்டு காதில் அவருடைய கோரிக்கைகள் கேட்காத நிலையில் உயிரிழந்து உள்ளார். இந்த உலகம் புனிதமான ஆத்மாக்களுக்கானது கிடையாது,” என வேதனையை பதிவு செய்துள்ளார். 

மேலும் செய்திகள்