சபரிமலைக்கு செல்லும் பெண்களை மறிக்கும் பக்தர்கள்! வாகனங்களை சோதனையிடுவதால் பதற்றம் அதிகரிப்பு

சபரிமலைக்கு செல்லும் பெண்களை பிறப்பெண் பக்தர்கள் வழிமறிக்கும் சம்பவம் பதற்றத்தை அதிகரித்து உள்ளது.

Update: 2018-10-16 10:13 GMT
திருவனந்தபுரம்,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை அமல்படுத்தும் முயற்சியில் கேரள மாநில அரசு இறங்கியுள்ளது. இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சபரிமலையின் பாரம்பரிய விதிகளை சீர்குலைக்க கூடாது என்று அய்யப்ப பக்தர்கள் கூறுகிறார்கள். மேலும் கேரள மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் அய்யப்ப பக்தர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதே சமயத்தில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டாலும் சபரிமலைக்கு செல்ல மாட்டோம் என்று பெண்களும் ஆங்காங்கே திரண்டு உறுதிமொழி எடுத்து வருகின்றனர். 

இதற்கிடையே கேரள மாநில அரசு அவசரச் சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.

ஆனால் கேரள மாநில அரசிடம் இருந்து இதற்கு சாதகமாக எந்தஒரு நகர்வும் தென்படவில்லை. பா.ஜனதாவும், இந்து அமைப்புகளும் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது. 

பேச்சுவார்த்தை தோல்வி

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிற்கு எதிராக போராட்டங்கள் தீவிரமாகிவரும் நிலையில் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிப்பதற்காக ஆலோசனை கூட்டம் ஒன்றை திருவிதாங்கூர் தேவசம்போர்டு நடத்தியது. இன்று நடைபெற்ற இந்த கூட்டத்துக்காக தந்திரிகள், பந்தளம் அரச குடும்பத்தினர், பக்தர் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. கூட்டத்தில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. திருவிதாங்கூர் தேவசம்போர்டு பேச்சுவார்த்தை முயற்சி தோல்வியில் முடிந்தது. மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்பதை அரசு தரப்பு ஏற்க மறுக்கிறது.

“அக்டோபர் 19-ம் தேதி மறுஆய்வு தொடர்பாக ஆலோசனையை மேற்கொள்ள முடியும் என தேவசம்போர்டு கூறியுள்ளது. அவர்கள் இன்று அதுதொடர்பாக ஆலோசனையை மேற்கொள்ள தயாராக இல்லை. கூட்டம் திருப்திகரமாக இல்லை. அவர்கள் எங்களுடைய கோரிக்கையை ஏற்க தயாராக இல்லை, எனவே நாங்கள் வெளியேறுகிறோம்,” என பந்தளம் அரச குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்வாங்க மாட்டோம் 
 
போராட்டம், பேச்சுவார்த்தை தோல்வி என்ற தொடர்ச்சியான நெருக்கடிக்கு எதிரே பின்வாங்க மாட்டோம் என பினராயி விஜயன் கூறியுள்ளார்.

மிகப்பெரிய போராட்டம் நடத்தப்போவதாக பா.ஜனதா எச்சரித்துள்ள நிலையில், மறு சீராய்வு மனுத்தாக்கல் செய்யப்போவதில்லை என முதல்வர் பினராயி விஜயன் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

‘‘சபரிமலை விவகாரத்தில் எங்கள் நிலைபாட்டை ஏற்கெனவே தெளிவாக தெரிவித்து விட்டோம். இதில் தனிப்பட்டமுறையில் மாநில அரசுக்கு நிலைப்பாடு இல்லை. கோர்ட்டு தீர்ப்பை நாங்கள் செயல்படுத்துகிறோம். யாரும் சட்டத்தை கையில் எடுத்து கொள்ள அனுமதிக்க முடியாது. சபரிமலை கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவோம். மறு சீராய்வு மனுத்தாக்கல் செய்யப்போவதில்லை என்ற முடிவில் மாற்றம் இல்லை’’ என்று கூறியுள்ளார். 

வழிமறிக்கும் பெண்கள்

கோவில் நாளை திறக்கப்பட உள்ளநிலையில் அய்யப்பன் கோவிலுக்கு 10 வயது முதல் 50 வயதுடைய பெண்கள் யாராவது வருகிறார்களா? என்பதை பிற பெண் பக்தர்கள் கவனிக்க தொடங்கியுள்ளனர். வாகனங்களை சோதனையிடும் அவர்கள் 10 வயது முதல் 50 வயதுடைய பெண்களை கீழே இறங்க சொல்லும் சம்பவமும் நேரிட்டுள்ளது. சபரிமலை கோவிலுக்கு செல்லும் வழியில் நிலாக்கல் பகுதியில் வயதான பெண் பக்தர்கள் உள்பட பிறப் பெண் பக்தர்கள் சாலைகளை வரிசையாக வழிமறிக்கிறார்கள். தனியார் வாகனங்கள் மட்டுமின்றி கேரள மாநில அரசு பஸ்களையும் மறிக்கும் அவர்கள் இளம்பெண்களை வெளியேறுமாறு கேட்டுக்கொண்டு வருகிறார்கள். இச்சம்பவம் நடைபெற்ற போது அங்கு குறைந்த அளவு போலீசார்தான் இருந்தனர்.

நாளை கோவில் திறக்கப்பட உள்ளநிலையில் வயதான பெண் ஒருவர் பேசுகையில், “ 10 வயது முதல் 50 வயதுடைய பெண்களை கோவிலுக்கு செல்வதை அனுமதிக்க மாட்டோம்,” என கூறியுள்ளார். நேற்று மாலையில் இருந்து சபரிமலை கோவிலுக்கு செல்லும் வழியில் நிற்கும் பெண் பக்தர்கள் கண்காணிப்பை தீவிரப்படுத்தி வருகிறார்கள். கோவில் திறக்கப்பட உள்ள நிலையில் போராட்டம் மற்றும் வழிமறிப்பு சம்பவங்கள் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்