சபரிமலை விவகாரம்: கேரளாவில் இன்று முழு அடைப்பு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் வழிபட அனுமதித்து சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் போராட்டங்கள் தீவிரம் அடைந்து உள்ளன.

Update: 2018-10-17 23:45 GMT

திருவனந்தபுரம்,

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பிறகு முதல் முறையாக நேற்று மாலை சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது. வருகிற 22–ந்தேதி வரை நடை திறந்திருக்கும்.

இந்த நிலையில் முதல் நாளே சபரிமலை செல்வதற்காக ஏராளமான இளம் பெண்கள் வாகனங்களில் வந்தனர். அவர்கள் நிலக்கல்லில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் இந்த போராட்டம் வலுத்துள்ளது.

மேலும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மாநில அரசு அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரவீன் தொகாடியா தலைமையிலான அந்தராஷ்டிரிய இந்து பரி‌ஷத் மற்றும் சபரிமலை சம்ரக்‌ஷணா சமிதி ஆகிய இந்து அமைப்புகள் நேற்று நள்ளிரவு முதல் 24 மணி நேர முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தன.

இதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. குறிப்பாக சபரிமலைக்குச் செல்லும் வழிகளான நிலக்கல், பம்பை, எருமேலி, வண்டிபெரியார் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக் கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். முழு அடைப்பு என்ற பெயரில் வாகனங்களை யாராவது தடுத்து நிறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெஹரா எச்சரித்தார்.

மேலும் செய்திகள்