‘நூற்றாண்டு பழமையான ஐதீகத்தை மீற விரும்பவில்லை’ சபரிமலையில் தடுத்து நிறுத்தப்பட்ட பெண்கள் போலீசுக்கு கடிதம்

சபரிமலையில் கோவிலுக்கு செல்ல முயன்ற ஆந்திர மாநில இரு பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

Update: 2018-10-21 08:20 GMT
பம்பை,

சபரிமலையில் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு பக்தர்கள் தரப்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. போராட்டம் காரணமாக செல்லும் பெண்கள் திரும்பி வருகிறார்கள். பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 40 வயதுடைய இரு பெண்கள் கோவிலுக்கு சென்றனர். அய்யப்பனை தரிசனம் செய்ய சென்ற பெண்கள் நடைப்பந்தல் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டனர். பக்தர்களின் எதிர்ப்பால் அவர்கள் சன்னிதானம் செல்லாமல் பம்பைக்கு மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டார். 

ஆந்திர மாநில பெண்கள் தங்கள் உறவினர்களுடன் கோவிலுக்கு வந்துள்ளனர். அப்போது அய்யப்ப பக்தர்கள் கோஷம் எழுப்பவும் பம்பை திரும்பிவிட்டனர். கோவிலின் ஐதீகம் எங்களுக்கு தெரியாது என அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள கோவில்களுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றவர்கள் எல்லா கோவில்களுக்கு சென்றுள்ளனர். அப்போது சபரிமலை நடை திறப்பை அறிந்து அங்கும் சென்றுள்ளனர். அப்போதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது. 

போராட்டம் நடத்திய பக்தர்கள், கேரள கோவிலுக்கு வந்த குழுவில் இடம்பெற்றிருந்த 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களை சாமி தரிசனம் செய்ய அனுமதித்தனர். 

இதற்கிடையே கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்ட பெண்கள் நிலக்கல் திரும்பினர். அவர்கள் போலீசில் வழங்கியுள்ள கடிதத்தில் “நாங்கள் கோவிலின் பாரம்பரிய ஐதீகம் தெரியாமல் இங்கு வந்துவிட்டோம். நூற்றாண்டுக்கால பாரம்பரியத்தை நாங்கள் உடைக்க விரும்பவில்லை,” என கூறியுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது. சபரிமலை கோவில் திறக்கப்பட்டு 5 நாட்கள் ஆகும் நிலையில் பக்தர்களின் போராட்டம் காரணமாக பெண்கள் சாமியை தரிசனம் செய்யாமல் திரும்பி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்