அருணாசல பிரதேசத்தில் ராணுவத்துக்கு நிலம் வழங்கிய கிராம மக்களுக்கு ரூ.38 கோடி இழப்பீடு

1962–ம் ஆண்டு இந்திய–சீன யுத்தத்துக்கு பிறகு அருணாசல பிரதேசத்தில் ராணுவ முகாம், பாலங்கள், குடியிருப்புகள் கட்டுவதற்காக எல்லையோர கிராம மக்களிடம் இருந்து இந்திய ராணுவம் நிலம் கையகப்படுத்தியது.

Update: 2018-10-21 19:00 GMT
இடாநகர், 

1962–ம் ஆண்டு இந்திய–சீன யுத்தத்துக்கு பிறகு அருணாசல பிரதேசத்தில் ராணுவ முகாம், பாலங்கள், குடியிருப்புகள் கட்டுவதற்காக எல்லையோர கிராம மக்களிடம் இருந்து இந்திய ராணுவம் நிலம் கையகப்படுத்தியது. ஆனால் அதற்கான இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வந்தது.

கடந்த ஆண்டு முதல் இழப்பீட்டுத் தொகை மாவட்டந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை பல்வேறு கிராம மக்கள் 200 பேருக்கு ரூ.157 கோடி வழங்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் மேற்கு கெமாங்க் மாவட்டம் பொம்டிலா கிராமத்தில் இழப்பீடு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் மத்திய உள்துறை ராஜாங்க மந்திரி கிரண் ரிஜிஜூ, மாநில முதல்–மந்திரி பீமா காண்டு ஆகியோர் கிராம வாசிகளுக்கு ரூ.37.73 கோடியை காசோலையாக வழங்கினர்.

அப்போது கிரண் ரிஜிஜூ பேசும்போது, ‘‘நாட்டின் நலனுக்காக நிலம் வழங்கியவர்களுக்கு 50 ஆண்டுக்கும் மேலாக இழப்பீடு வழங்கப்படாமல் இருந்தது. எந்த அரசும் இதற்கான நடவடிக்கை எடுக்காத நிலையில் பிரதமர் மோடியும், ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனும் இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொண்டனர். அவர்களுக்கு நன்றி’’ என்று குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்