மேலிட பனிப்போரில் தலையிட்ட பிரதமர் மோடி சிபிஐ உயர் அதிகாரிகள் ஆஜராக உத்தரவு

சிபிஐ மேலிட பனிப்போரில் தலையிட்டுள்ள பிரதமர் மோடி இரு உயர் அதிகாரிகளுக்கு சம்மன் விடுத்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2018-10-22 11:35 GMT

புதுடெல்லி,


மேலிடத்தில் மோதல் 

சி.பி.ஐ. சிறப்பு இயக்குனராக இருப்பவர் ராகேஷ் அஸ்தானா. குஜராத் பிரிவில் இருந்து ஐ.பி.எஸ். அதிகாரி ஆனவர். ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கு, விஜய் மல்லையா கடன் மோசடி வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளின் சிறப்பு புலனாய்வு குழு தலைவராக இருக்கிறார்.

இவர் மீதான 6 ஊழல் புகார்கள் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இதனால், அவரை சிறப்பு இயக்குனர் பதவியில் நியமிக்கக்கூடாது என்று சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருந்தார். அதையும் மீறி, ராகேஷ் அஸ்தானா நியமிக்கப்பட்டார். அதிலிருந்து ஓராண்டாக இருவருக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது.

லஞ்ச புகார் 

இதற்கிடையே, இறைச்சி வியாபாரி மொயின் குரேஷி மீதான வழக்கையும் ராகேஷ் அஸ்தானா தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. அந்த வழக்கில், ஐதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் சதீஷ் சனா மீது சந்தேகம் எழுந்தது. இதனால், அவரை வழக்கில் இருந்து விடுவிக்க செய்வதாக மனோஜ் பிரசாத் என்ற இடைத்தரகர் அணுகினார். இதற்கு ரூ.5 கோடி தருவதாக பேரம் முடிவானது. முதல்கட்டமாக சதீஷ் சனா, மனோஜ் பிரசாத்திடம் ரூ.2 கோடி கொடுத்தார்.

ராகேஷ் அஸ்தானா சார்பில்தான் மனோஜ் பிரசாத் தன்னிடம் ரூ.2 கோடி வாங்கியதாக சதீஷ் சனா புகார் அளித்தார். அதன்பேரில், மனோஜ் பிரசாத்தை சி.பி.ஐ. கைது செய்தது.

வழக்கு பதிவு 

மேலும், திடீர் திருப்பமாக, சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. சி.பி.ஐ.யில் இரண்டாவது இடத்தில் உள்ள அவர் மீது வழக்கு பதிவு செய்திருப்பது, இதுவரை இல்லாத நடவடிக்கையாக கருதப்படுகிறது.

இவ்வழக்கில், ‘ரா’ உளவு அமைப்பின் சிறப்பு செயலாளர், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி ஆகியோரும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். தொழில் அதிபர் சதீஷ் சனாவை விடுவிக்க அவரிடம் சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாதான் லஞ்சம் வாங்கியதாக மத்திய மந்திரிசபை செயலாளருக்கு கடந்த ஆகஸ்டு மாதம் எழுதிய கடிதத்தில் ராகேஷ் அஸ்தானா குற்றம் சாட்டி இருந்தார். சதீஷ் சனாவை தான் கைது செய்ய விரும்பியதாகவும், ஆனால், அலோக் வர்மாதான் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் தாமதம் செய்ததாகவும் அவர் கூறி இருந்தார்.

இந்த புகாரை ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்கு மந்திரிசபை செயலாளர் அனுப்பி வைத்தார். அதன் மீது விசாரணை நடந்து வருகிறது. இப்படி, சி.பி.ஐ. இயக்குனர் மீது சிறப்பு இயக்குனர் லஞ்ச குற்றச்சாட்டு சுமத்திய நிலையில்தான், அவர்களுக்கிடையிலான பனிப்போரில் சிறப்பு இயக்குனர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மற்றொரு கைது 

இந்நிலையில் ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிரான ஊழல் புகாரில் சிபிஐ சிறப்பு எஸ்.பி. தேவேந்திர குமாரை சிபிஐ கைது செய்துள்ளது.

பிரதமர் மோடி உத்தரவு

சிபிஐயில் பனிப்போர் உச்சக்கட்டம் அடைந்த நிலையில் அரசியல் விமர்சனங்களும் எழுந்துள்ளது, காங்கிரஸ் பிரதமர் மோடிக்கு எதிரான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இந்நிலையில் ராகேஷ் அஸ்தானா மற்றும் அலோக் வர்மா இருவரும் ஆஜராகுமாறு பிரதமர் மோடி சம்மன் விடுத்துள்ளதாக தகவல் வெளியகியுள்ளது. இதற்கிடையே ராகேஷ் அஸ்தானாவிற்கு எதிராக வழக்குப்பதிவு செய்தவற்கு பிரதமர் அலுவலகத்தின் அனுமதியை சிபிஐயை நாடவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சிபிஐயில் இரு அதிகாரிகள் வெளிப்படையாக ஊழல் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது நெருக்கடியை ஏற்படுத்தியது. இருவருக்கு எதிராகவும் நடவடிக்கை இருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்