சிறப்பு பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை திங்கள் கிழமை திறப்பு: பல்வேறு இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு

ஐயப்பன் கோவில் சிறப்பு பூஜைக்காக திங்களன்று நடை திறக்கப்பட உள்ளது. இதனால், பல்வேறு இடங்களில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Update: 2018-11-03 02:33 GMT
பத்தினம் திட்டா,

கேரளாவில் உள்ள உலகப்புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு அளித்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை அமல்படுத்த கேரள அரசு வேகம் காட்டியது. கடந்த மாதம் 17 ஆம் தேதி ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க கேரள அரசு தீவிரம் காட்டி போதுமான போலீஸ் பாதுகாப்பை உறுதி செய்திருந்தாலும் போராட்டக்காரர்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்காமல் போராட்டம் நடத்தினர். கோயிலுக்குள் வர முயன்ற பெண்கள் திருப்பி அனுப்பப் பட்டனர். 

இதனால், பதற்றமான சூழல் ஏற்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயில் திறந்து இருந்த 5 நாட்களே பம்பை, நிலக்கல், சபரிமலையில் போர்க்களம் போல் காட்சியளித்தது. கோயிலுக்கு செல்ல முயன்ற பெண்கள் இறுதி வரை அனுமதிக்கப்படவில்லை.இந்தநிலையில் ஐயப்பன் கோயிலுக்குள் செல்ல முயன்ற பெண்களை தடுத்து பம்பை, சபரிமலை, நிலக்கலில் போராட்டம் நடத்தியது தொடர்பாக கேரள போலீஸார் வழக்குப்பதிவு செய்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர். 

இந்த நிலையில், சிறப்பு பூஜைக்காக வரும் திங்கள் கிழமை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட உள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இலவங்கல், நிலக்கல், பம்பை, மற்றும் சன்னிதானம் ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் ஒன்று கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது. எந்த அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் தடுக்கும் நோக்கில் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்