திருமணம் முடிந்த ஆறே மாதத்தில் விவாகரத்து கோரி பாட்னா நீதிமன்றத்தில் லாலு மகன் மனு

திருமணம் முடிந்த ஆறே மாதத்தில் விவாகரத்து கோரி பாட்னா நீதிமன்றத்தில் லாலு பிரசாத் யாதவ் மகன் மனு தாக்கல் செய்துள்ளார்.

Update: 2018-11-03 04:10 GMT
பாட்னா, 

பீகாரில் பிரதான கட்சிகளின் ஒன்றான ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜ் பிரதாப் யாதவ். தேஜ் பிரதாப் யாதவுக்கும் , பீகார் முன்னாள் மந்திரியின் மகள் ஐஸ்வர்யா ராய் என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இல்லற வாழ்க்கையில் திடீரென புயல் வீசியுள்ளது. தேஜ் பிரதாப் யாதவ் தனக்கு மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி பாட்னா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 

பாட்னா நீதிமன்றத்தில், விவகாரத்து கோரி தேஜ் பிரதாப் யாதவ் மனு தாக்கல் செய்து இருப்பதாக செய்தி பரவியதும், அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி ஐஸ்வர்யா தனது குடும்பத்தினருடன் உடனடியாக தேஜ் பிரதாப் யாதவின் தாயார் ராப்ரி தேவி வீட்டுக்குச்சென்றார். இதற்கிடையே, சிறையில் உள்ள லாலு பிரசாத் யாதவும், தேஜ் பிரதாப் யாதவ் உடனடியாக தன்னை சந்திக்க வருமாறு கேட்டுக்கொண்டுள்ளார். விவாகரத்து மனுவை வாபஸ் பெற வைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.  இந்த விவகாரம் குறித்து, லாலு குடும்பத்தினர் வேறு யாரேனும் கருத்து சொல்ல மறுத்து விட்டனர். 

மே 12-ம் தேதி நடந்த தேஜ் பிரதாப் - ஐஸ்வர்யா ராய் திருமணத்தில் சுமார் 10 ஆயிரம் வி.ஐ.பி.-க்கள் கலந்து கொண்டனர். பீகார் கவர்னர் சத்ய பால் மாலிக், மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் லாலு மகனின் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் ஆவர். லாலுவின் 2-வது மகன் தேஜஸ்வி யாதவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவர்தான் தற்போது கட்சிப் பொறுப்புகளை கவனித்து வருகிறார்.

மேலும் செய்திகள்