பணமதிப்பு நீக்க நடவடிக்கை பல லட்சம் பேரின் வாழ்க்கையை அழித்த தற்கொலை தாக்குதல் ராகுல் காட்டம்

பணமதிப்பு நீக்க நடவடிக்கை, பல லட்சம் பேரின் வாழ்க்கையை அழித்த தற்கொலை தாக்குதல் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

Update: 2018-11-08 15:49 GMT

புதுடெல்லி,

பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி, கள்ளநோட்டு மற்றும் கருப்பு பண புழக்கம் போன்றவற்றை ஒழிப்பதற்காக, அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என கடந்த 2016–ம் ஆண்டு நவம்பர் 8–ந் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். இது நாடு முழுவதும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. மத்திய அரசின் இந்த அறிவிப்பால் மக்கள் தங்களிடம் இருந்த மேற்படி நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்தனர். பா.ஜனதா அரசின் இந்த அதிரடி நடவடிக்கை மிகப்பெரும் தோல்வியடைந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்த நிலையில் பணமதிப்பு நீக்கம் அமல்படுத்தப்பட்டு இன்று 2 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதையொட்டி அரசியல் கட்சிகள் மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளன. ஆனால் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்ததுடன், மத்திய–மாநில அரசுகளுக்கு மிகப்பெரும் பயன் கிடைத்திருப்பதாக மத்தியமைச்சர் அருண் ஜெட்லி கூறி உள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பணமதிப்பு நீக்க நடவடிக்கை, பல லட்சம் பேரின் வாழ்க்கையை அழித்த தற்கொலை தாக்குதல் என்று குற்றம் சாட்டியுள்ளார். 
  
பணமதிப்பு நீக்க நடவடிக்கை பல லட்சம் பேரின் வாழ்க்கையையும், ஆயிரக்கணக்கான சிறு தொழில்களையும் அழித்த தற்கொலை தாக்குதலாகும். மோசமாக வகுக்கப்பட்டு தவறாக நடைமுறைப்படுத்தப்பட்ட பொருளாதார கொள்கையாகும்.  நன்கு திட்டமிடப்பட்ட ஒரு குற்றவியல் பொருளாதார ஊழல் ஆகும். இதுதொடர்பான முழு உண்மைகள் இன்னும் வெளியாகவில்லை. அது வெளியாகும்வரை இந்திய மக்கள் ஓய மாட்டார்கள். அரசு எவ்வளவுதான் மறைத்தாலும் நாடு கண்டுபிடிக்கும். 

தகுதியற்ற நிதி மந்திரி உள்ளிட்டவர்கள், இந்த குற்றவியல் கொள்கைக்கு முட்டுக்கொடுக்கும் வேலையில் இறங்கி உள்ளனர். பணமதிப்பு நீக்கத்தின் நோக்கங்கள் எதுவுமே நிறைவேறவில்லை. வெறும் பேரழிவாகவே முடிந்து விட்டதாக உலகம் முழுவதும் உள்ள பொருளாதார வல்லுனர்கள் கணித்துள்ளனர். இந்த நடவடிக்கை அறிவிக்கப்பட்ட நாள், ஒரு மோசமான நாளாக இந்திய வரலாற்றில் எப்போதும் நினைவில் நிற்கும் என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். 

மேலும் செய்திகள்