பெண்களை அனுமதிக்கும் விவகாரம் சுப்ரீம் கோர்ட்டு செல்கிறது தேவஸ்தான போர்டு

சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிக்கும் உத்தரவை அமல்படுத்த கூடுதல் அவகாசம் கோரி தேவஸ்தான போர்டு சுப்ரீம் கோர்ட்டு செல்ல முடிவு செய்துள்ளது.

Update: 2018-11-16 12:26 GMT
திருவனந்தபுரம், 

கேரள மாநிலம் சபரிமலையில் உலகப் புகழ்பெற்ற அய்யப்பன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதித்து கடந்த செப்டம்பர் மாதம் 28–ந் தேதி சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது. ஆனால் இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக கேரளாவில் போராட்டங்கள் தீவிரமடைந்தது. பக்தர்கள் போராட்டம் காரணமாக பெண்கள் கோவிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பதற்றமான நிலை ஏற்பட்டது.

போராட்டம் தொடரும் நிலையில் இன்று மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைக்காக கோவில் இன்று திறக்கப்பட்டுள்ளது. பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சபரிமலை செல்வதற்காக கேரளா சென்ற திருப்தி தேசாய் கொச்சி விமான நிலையத்தில் அய்யப்ப பக்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். சபரிமலை சீசன் காலத்தில் போராட்டம் தொடரும் நிலை ஏற்பட்டால் மோசமான நிலை ஏற்படலாம் என்ற அச்சமும் நிலவுகிறது. இந்நிலையில் கோவிலில் பெண்களை அனுமதிக்கும் உத்தரவை அமல்படுத்த கூடுதல் அவகாசம் கோரி தேவஸ்தான போர்டு சுப்ரீம் கோர்ட்டு செல்ல முடிவு செய்துள்ளது.

மேலும் செய்திகள்