டெல்லி தலைமைச்செயலகத்தில் பரபரப்பு: கெஜ்ரிவால் மீது மிளகாய் பொடி வீச்சு - தாக்குதல் நடத்தியவர் பிடிபட்டார்

டெல்லி தலைமைச்செயலகத்தில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது மிளகாய் பொடி வீசி தாக்குதல் நடத்தியவர் பிடிபட்டார்.

Update: 2018-11-20 23:15 GMT
புதுடெல்லி,

டெல்லி மாநில அரசின் தலைமைச்செயலகம் 3 மாடிகளை கொண்ட கட்டிடத்தில் செயல்படுகிறது. அதன் 3-வது மாடியில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அலுவலகம் உள்ளது.

நேற்று வழக்கம் போல கெஜ்ரிவால் அலுவலகம் வந்து தன் பணிகளை கவனித்தார். மதியம் சுமார் 2 மணிக்கு அவர் மதிய சாப்பாட்டுக்கு செல்வதற்காக தனது அறையில் இருந்து வெளியே வந்தார்.

அப்போது முதல்-மந்திரி அலுவலகத்துக்கு வெளியே பதுங்கி நின்ற ஒருவர் கெஜ்ரிவால் மீது மிளகாய் பொடி வீசி தாக்குதல் நடத்தினார். இதில் அவரது மூக்கு கண்ணாடி கீழே விழுந்து உடைந்தது. நல்ல வேளையாக மிளகாய் பொடி அவரது கண்களை பதம் பார்க்கவில்லை.

அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், மிளகாய் பொடி வீசி தாக்குதல் நடத்திய அந்த நபரை பாய்ந்து சென்று பிடித்து விசாரணைக்கு கொண்டு சென்றனர்.

அவர், டெல்லி நாராயணா பகுதியை சேர்ந்த அனில் குமார் சர்மா (வயது 40) ஆவார்.

இந்த தாக்குதலின்போது கெஜ்ரிவாலுடன் இருந்த ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் ராகவ் சத்தா டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், 3-வது மாடியில் உள்ள அவரது அலுவலகத்தின் வெளியே வந்தபோது திடீரென (மிளகாய் பொடி வீசி) தாக்கப்பட்டார். பாதுகாப்பு குளறுபடி அதிர்ச்சி அளிக்கிறது. இது தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதல்-மந்திரியை பாதுகாப்பதில் டெல்லி போலீசாரின் தகுதியின்மை தானே?” என கூறி உள்ளார்.

துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறும்போது, “முதல்-மந்திரியின் மூக்கு கண்ணாடி கீழே விழுந்து இன்று (நேற்று) உடைந்திருக்கிறது என்றால் அது ஏற்றுக்கொள்ள முடியாத பாதுகாப்பு குளறுபடி ஆகும். தாக்குதல் நடத்தியவர் மிகவும் பயங்கரமான ஒரு ஆயுதத்தை எடுத்து வந்திருந்தால் என்னாகி இருக்கும்? கற்பனை செய்து பாருங்கள்” என்றார்.

இந்த தாக்குதலுக்கு பாரதீய ஜனதா கட்சிதான் காரணம் என அவர் குற்றம் சாட்டினார். “அதே நேரத்தில் பாரதீய ஜனதா கட்சியின் இத்தகைய சிறிய உத்திக்கெல்லாம் எங்கள் கட்சி அடிபணிந்து விடாது” என அவர் கூறினார்.

இதற்கிடையே டெல்லி பாரதீய ஜனதா கட்சி தலைவர் மனோஜ் திவாரி, இந்த தாக்குதலுக்கு தனது கண்டனத்தை பதிவு செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அவர் குறிப்பிடுகையில், “இத்தகைய சம்பவங்களை சகித்துக்கொள்ள முடியாது. நியாயப்படுத்தவும் இயலாது. இது குறித்து உயர் மட்ட அளவில் விசாரணை நடத்த வேண்டும்” என்று கூறினார்.

இந்த சம்பவம், டெல்லி தலைமைச்செயலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


மேலும் செய்திகள்