மோடி அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மாபெரும் தோல்வியாகும் - மன்மோகன் சிங்

மோடி அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மாபெரும் தோல்வியாகும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறி உள்ளார்.

Update: 2018-11-21 10:41 GMT
இந்தூர்,

மத்திய பிரதேச மாநிலத்தில்  இந்தூரில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தற்போதைய அரசாங்கத்தினால் இளைஞர்களுக்கும் விவசாயிகளுக்கும் வழங்கப்பட்ட  வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை பிரமாண்ட  தோல்வியை சந்தித்து உள்ளது. இது  விவசாயிகள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு  வேண்டுமென்றே வடிவமைக்கப்பட்ட ஒரு தாக்குதல் ஆகும்.

மோடி அரசின் பணமதிப்பிழப்பு  ரத்து நடவடிக்கை மாபெரும் தோல்வியாகும். பணமதிப்பு ரத்து நடவடிக்கையும், தவறான ஜிஎஸ்டி அமலாக்கமும் மக்களை வதைத்து விட்டன. 

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு வேலைவாய்ப்பு அதிகரிக்கவே இல்லை. ஆண்டுக்கு 17, 600 வேலைவாய்ப்புகள் தான் பாஜக ஆட்சியில் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. வேலை கிடைக்காததால் தற்கொலை செய்து கொள்வோர் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.

மத்தியப்பிரதேசம் உட்பட இந்தியா முழுவதிலும் விவசாயிகள் பெரும் வேதனையில் உள்ளனர். மத்தியப்பிரதேசத்தில் விவசாயி தற்கொலை செய்து கொள்வது மிக அதிகமாகும்.

மாநிலத்தில் ஒவ்வொரு ஐந்து மணி நேரத்திற்கு  ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்கிறார். 2004 மற்றும் 2016 க்கு இடையில் ஏறக்குறைய 17,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

நாடாளுமன்றம், சிபிஐ போன்ற தேசிய அமைப்புகளை பாஜக அரசு சீர்குலைத்து வருகிறது. திட்டமிட்ட முறையில் தேசிய அமைப்புகளை அரசு பலவீனப்படுத்தி வருகிறது. ரபேல் விமான பேரம் தொடர்பாக அரசு மீது மக்களுக்கு பெரும் சந்தேகம்  ஏற்பட்டுள்ளது.

எங்கள் ஆதிவாசி சகோதர சகோதரிகள் துயரத்தில் இருக்கிறார்கள். பி.ஜே.பி அரசு 3,63,424 ஆதிவாசி பட்டா கோரிக்கைகளை நிராகரித்து உள்ளது என கூறினார்.

மேலும் செய்திகள்