சாரை சாரையாக வரும் கரசேவகர்கள்; பாதுகாப்பு வளையத்திற்குள் அயோத்தி, உளவுப்பிரிவும் களம் இறக்கப்பட்டது

ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி அயோத்தியில் இரண்டு லட்சம் கரசேவகர்கள் திரண்டதால் பதற்றம் நிலவுகிறது.

Update: 2018-11-25 09:45 GMT

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரச்சினைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று பல்வேறு இந்து அமைப்புகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. 

இதனால் பா.ஜனதா அரசு இதுபற்றி வெளிப்படையாக கருத்து எதுவும் தெரிவிக்காமல் அமைதி காத்து வருகிறது. விசுவ இந்து பரிஷத், சிவசேனா மற்றும் இந்து அமைப்புகள் ராமர் கோவில் கட்டுவதற்கு மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன. இதை வலியுறுத்தும் விதமாக அயோத்தி நகரில் இன்று பிரமாண்ட மாநாட்டுக்கு விசுவ இந்து பரிஷத் அழைப்பு விடுத்து உள்ளது. இந்த மாநாடு அங்குள்ள பார்கர்மா மார்க் பகுதியில் நடக்கிறது. இதில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட கரசேவகர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பங்கேற்பதற்காக நேற்று காலையிலேயே 1 லட்சத்துக்கும் அதிகமான கரசேவகர்கள் அயோத்தியில் குவிந்து விட்டனர். கரசேவகர்கள் சாரை சாரையாக அயோத்தி நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறார்கள், இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் குவிந்துள்ளனர். 

ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி தனிப்பட்ட முறையில் மாநாடு நடத்திய சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, ராமர் கோவிலை கட்டுங்கள் இல்லையெனில் ஆட்சியில் இருக்க முடியாது என பா.ஜனதாவிற்கு எச்சரிக்கையை விடுத்துள்ளார். 

பாதுகாப்பு வளையத்திற்குள் அயோத்தி

ராமர் கோவில் கட்டுவதற்காக எதையும் சந்திக்கத் தயார் என்று அண்மைக்காலமாக இந்து அமைப்புகளின் தலைவர்கள் பேசி வருவதால் அயோத்தியில் மீண்டும் பதற்றம் நிலவுகிறது. அயோத்தி நகரில் அசம்பாவிதம் எதுவும் நடந்து விடக்கூடாது என்பதால் பல்வேறு முக்கிய இடங்களில் பல அடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது. ராமஜென்ம பூமி பகுதியில் மக்கள் நடமாடுவதற்கு கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு இருக்கிறது. நகரில் பதற்றம் நிலவுவதால் ஆள் இல்லாத குட்டி விமானங்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. அயோத்தியில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் இதையும் மீறி அயோத்தியில் கரசேவகர்கள் பல்வேறு வழிகளில் நகருக்குள் திரண்ட வண்ணம் உள்ளனர். 

உளவுப்பிரிவு

உத்தரபிரதேச மாநில சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு ஏடிஜி ஆனந்த் குமார் பேசுகையில், “அயோத்தி இரு பகுதியாக பிரிக்கப்பட்டுள்ளது, ரெட் மற்றும் மஞ்சள் பாதுகாப்பு பகுதிகளாக இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு உத்தரவினை நிலை நிறுத்த மாநில போலீஸ் மற்றும் நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. மத்திய பாதுகாப்பு படைகள், பயங்கரவாத தடுப்பு பிரிவுகள் பாதுகாப்பு பணியில் அதிகமாக ஈடுபடுத்தப்பட்டு அயோத்தி பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆள் இல்லாத குட்டி விமானங்கள் மூலம் சோதனை செய்யப்படுகிறது. 2000 பேருந்துகள் பல்வேறு இடங்களில் இருந்து அயோத்தி வந்துள்ளது. சில நாட்களுக்கு முன்னதாக எங்களுக்கு உளவுத்துறையின் உள்ளீடு கிடைக்கப் பெற்றது. எந்தஒரு குறிப்பிடத்தக்க எச்சரிக்கையும் கிடையாது. நடவடிக்கை எடுக்கப்படும். மாநில மற்றும் மத்திய உளவுப்பிரிவு அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் களமிறக்கப்பட்டுள்ளார். கண்காணிப்பு தீவிரமாக நடக்கிறது என கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்