அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் என்றவர்கள்தான் ஆட்சியில் உள்ளனர் : பா.ஜனதா மீது ஆர்.எஸ்.எஸ். தலைவர் அட்டாக்!

அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் என்றவர்கள் தான் ஆட்சியில் உள்ளனர் என பா.ஜனதாவை ஆர்.எஸ்.எஸ். தலைவர் விமர்சனம் செய்துள்ளார்.

Update: 2018-12-09 12:33 GMT
புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமருக்கு கோவில் கட்டவேண்டும் என்று விசுவ இந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட அமைப்புகள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றன. இதற்கு கடும் எதிர்ப்பு உள்ளது. இந்த விவகாரம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால், இந்த பிரச்சினை இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில் விசுவ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி அங்கு 2 நாள் மாநாடு நடந்தது.

அப்போது நிர்மோஹி அஹாரா அமைப்பைச் சேர்ந்த சாமியார் ராம்ஜி தாஸ், “அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் தேதியை பிரயாக் ராஜ் (அலகாபாத்) நகரில் ஜனவரி மாதம் 15-ந் தேதி தொடங்கி மார்ச் 4-ந் தேதி வரை நடைபெறும் கும்பமேளாவில் அறிவிப்போம்” என்றார்.

மாநாட்டின் நிறைவில் அயோத்தியில் விரைவாக ராமர் கோவில் கட்டும் வகையில் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வரவேண்டும் அல்லது அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. சட்டம் இயற்ற வேண்டும் என்று பா.ஜனதா அரசுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது. 2019 பாராளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கியுள்ள நிலையில் கோவில் தொடர்பான விவகாரம் மீண்டும் தலைத்தூக்கியுள்ளது. இன்று டெல்லி ராம்லீலா மைதானத்திலும் கோவில் கட்டுவதை வலியுறுத்தி இந்து அமைப்புகள் சார்பில் பேரணி நடத்தப்படுகிறது.
 
பேரணியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுரேஷ் பையாஜி ஜோஷி பா.ஜனதாவை குறிப்பிட்டு பேசாமல் பேசுகையில், “இன்று ஆட்சியில் இருப்பவர்கள்தான் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் என வாக்குறுதியளித்தார்கள். அவர்கள் மக்களின் குரலை கேட்க வேண்டும். அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும். பொதுமக்களின் உணர்வை அவர்கள் அறிந்திருப்பார்கள். நாங்கள் பிச்சை கேட்கவில்லை. எங்களுடைய உணர்வைதான் வெளிப்படுத்துகிறோம். தேசம் ராம ராஜியத்தை விரும்புகிறது. நாங்கள் எந்த சமூதாயத்துடனும் சண்டைக்கு முற்படவில்லை. ராமர் கோவில் கட்டுவதற்கு சட்டம் இயற்றுவது ஒன்றுதான் வழியாகும். கோவில் கட்டுவது தொடர்பான வாக்குறுதி நிறைவேற்றப்படும் வரையில் எங்களுடைய போராட்டம் தொடரும்” என்று கூறியுள்ளார். 

ஹிரிதுவாரை சேர்ந்த சாமியார் சுவாமி ஹன்ஸ்தேவசார்யா பேசுகையில், “பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் அவரை விட மாட்டோம்” என எச்சரிக்கை விடுத்துள்ளார். 

மேலும் செய்திகள்