போலி கால்சென்டரில் பணியாற்றிய 126 பேர் கைது - அமெரிக்கர்களிடம் பேசி மோசடியில் ஈடுபட்டனர்

அமெரிக்கர்களிடம் பேசி மோசடியில் ஈடுபட்டதாக, போலி கால்சென்டரில் பணியாற்றிய 126 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-12-21 21:30 GMT
நொய்டா,

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள 63-வது செக்டார் பகுதியில் இயங்கிவந்த ஒரு கால்சென்டரில் சில மோசடி செயல்கள் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நேற்று முன்தினம் இரவில் அங்கு சென்று சோதனை நடத்தினார்கள்.

அங்கு பணிபுரிந்த தொலைபேசி ஆபரேட்டர்கள் உள்பட 126 ஊழியர்களையும் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள், அமெரிக்காவில் உள்ள மக்களுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசுவார்கள். அவர்களுக்கு அங்கு 9 இலக்க சமூக பாதுகாப்பு எண் வழங்கப்பட்டுள்ளது.

அந்த எண்ணில் பிரச்சினை இருப்பதாக அவர்களிடம் தெரிவித்து, அதனை சரிசெய்வதாக கூறி பணம் பெற்றுவந்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று 126 பேரையும் கைது செய்வதாக போலீசார் அறிவித்தனர்.

நொய்டாவில் கடந்த சில மாதங்களில் மட்டும் சுமார் ஒரு டஜன் போலி கால்சென்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, ஏராளமான ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அமெரிக்கர்கள், கனடா நாட்டினர் உள்பட பல வெளிநாட்டு மக்களை இதேபோல ஏமாற்றி மோசடி செய்துவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்