சபரிமலை செல்ல முயன்ற மேலும் 2 பெண்களின் முயற்சி தோல்வி

சபரிமலைக்கு செல்ல முயன்ற மேலும் 2 பெண்கள், பக்தர்களின் கடும் எதிர்ப்பால் திருப்பி அனுப்பப்பட்டனர்.

Update: 2018-12-24 23:45 GMT

சபரிமலை,

சபரிமலை அய்யப்பன் கோவிலில், அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பா.ஜனதா மற்றும் இந்து அமைப்புகளும், அய்யப்ப பக்தர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்த கேரள அரசு முடிவு செய்திருப்பதால், அதை எதிர்த்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

சபரிமலைக்கு செல்ல முயன்ற பெண் பத்திரிகையாளர் உள்பட 10–க்கும் மேற்பட்ட பெண்கள், பக்தர்களின் எதிர்ப்பால் ஏற்கனவே திருப்பி அனுப்பப்பட்டு உள்ளனர்.

சென்னையில் இயங்கி வரும் ‘மனிதி’ அமைப்பை சேர்ந்த 11 பெண்கள், நேற்று முன்தினம் சபரிமலைக்கு செல்ல முயன்றனர். பம்பையில் பக்தர்களின் கடும் எதிர்ப்பால், அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

அவர்கள் நேற்று சென்னை திரும்புவதற்காக, சபரிமலை ரெயில் நிலையத்துக்கு சென்றனர். அப்போது, பா.ஜனதா தொண்டர்கள், ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இந்நிலையில், நேற்று மேலும் 2 பெண்கள் சபரிமலைக்கு செல்ல முயன்றனர். கேரள மாநிலம் கோயிலாண்டியை சேர்ந்த பிந்து, மலப்புரத்தை சேர்ந்த கங்கா துர்கா ஆகியோர் பம்பையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மலை ஏறத் தொடங்கினர். அப்போது, பிந்து நிருபர்களிடம் கூறுகையில், ‘‘நாங்கள் அய்யப்பனை தரிசிக்க விரும்புகிறோம். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும். எங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும்’’ என்றார்.

அந்த பெண்களை அப்பச்சிமேடு என்ற இடத்தில் பக்தர்கள் தடுத்தனர். இருப்பினும், போலீசார் அந்த பக்தர்களை விரட்டி அடித்தனர்.

தொடர்ந்து மலை ஏறி, மரக்கூட்டம் என்ற இடத்தை அடைந்தபோது, 2 பெண்களையும் ஏராளமான பக்தர்கள் முற்றுகையிட்டு வழிமறித்தனர்.

அதே சமயத்தில், இந்த நிலைமை குறித்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் போர்டு தலைவர் ஏ.பத்மகுமார், முதல்–மந்திரி பினராயி விஜயனிடமும், போலீஸ் டி.ஜி.பி.யிடமும் தொலைபேசியில் பேசினார். பக்தர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கையால், சட்டம்–ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று அவர் கூறினார்.

இதையடுத்து, அந்த 2 பெண்களையும் கைது செய்யுங்கள் அல்லது திருப்பி அனுப்புங்கள் என்று போலீசாருக்கு முதல்–மந்திரி அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்தது. இதை அப்பெண்களிடம் போலீசார் தெரிவித்தபோது, அவர்கள் சன்னிதானத்துக்கு செல்வதில் பிடிவாதமாக இருந்தனர். இதனால் அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர்.

இரு பெண்களையும் பம்பை போலீஸ் நிலையத்துக்கு கூட்டி சென்றனர். 2 பேரின் உடல்நிலையும் மோசமாக இருந்ததால், பின்னர், கோட்டயம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

அப்பெண்கள் மலை ஏறுவதற்கு போலீசார் மறைமுக ஆதரவு அளித்ததாக சபரிமலை கர்ம சமிதி அமைப்பாளர் எஸ்.ஜே.ஆர்.குமார் குற்றம் சாட்டினார்.

மேலும், மேற்கண்ட 2 பெண்களின் வீடுகளை முற்றுகையிட்டு பா.ஜனதா தொண்டர்கள் போராட்டம் நடத்தினர்.

இதற்கிடையே, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்துவதற்கு காவல்துறை இயன்ற அளவுக்கு முயன்று வருவதாக போலீஸ் டி.ஜி.பி. தெரிவித்தார்.

மேலும் செய்திகள்