பிரதமராகும் ஆசை எனக்கு இல்லை ; பிரதமர் பதவிக்கு போட்டியிட மாட்டேன் -சந்திரபாபு நாயுடு

பிரதமர் பதவிக்கு போட்டியிட மாட்டேன் என்று ஆந்திர முதல்-மந்திரியும், தெலுங்குதேசம் தலைவருமான சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

Update: 2018-12-29 08:18 GMT
புதுடெல்லி

ஆந்திர முதல்-மந்திரியும், தெலுங்கு தேசம் தலைவருமான சந்திரபாபு நாயுடு தனது மாநிலத்துக்கு மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து வழங்கி கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்று கூறி பா.ஜனதாவுக்கு எதிராக களம் இறங்கி இருக்கிறார்.

சந்திரபாபு நாயுடு ஒரு ஆங்கில பத்திரிக்கைக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறி இருப்பதாவது:-

தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் பிரதான எதிர்க்கட்சியாக விளங்குகிறது. தேர்தலில் நாங்கள் கூட்டணி சேர்ந்தோம். பா.ஜனதா மற்றும் தெலுங்கானா கட்சியை எதிர்க்கும் முகமாகவே இந்த கூட்டணி உருவானது.

கூட்டாட்சி தத்துவத்தின் கீழ் பா.ஜனதாவிடம் இருந்து மாநிலங்களின் உரிமையை பாதுகாக்க வேண்டும். பா.ஜனதாவை எதிர்க்க சக்தி வாய்ந்த கட்சிகள் காங்கிரசுடன் கை கோர்க்க வேண்டியது அவசியம். கடந்த 4 வருடங்களாக தெலுங்கானாவில் காங்கிரசால் எதிர்ப்பு அரசியல் நடத்த முடியவில்லை. எனவே நாங்கள் வலுப்படுத்தவே கூட்டணி சேர்ந்தோம்.

ஆனால் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்களிடையே ஒற்றுமை இல்லை. பணபலம் மற்றும் நலத்திட்டங்களிலும், வாக்குப்பதிவு எந்திரத்தில் தில்லுமுல்லு செய்தும் சந்திரசேகரராவ் வெற்றி பெற்றார்.

நான் பாரதீய ஜனதா  பலமான கட்சியாக இருக்கும்போதே எதிர்த்து வெளியேறினேன். தற்போது  பாரதீய ஜனதா நாளுக்கு நாள் பலம் இழந்து வருகிறது.

சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தல்கள் பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதற்கான அரை இறுதிப் போட்டியாகும். தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடந்தால் பாரதீய ஜனதா வெற்றி பெற முடியாது.

மத்தியில் பாரதீய ஜனதா அல்லாத கட்சிகள் கொண்ட கூட்டணி தான் ஆட்சிக்கு வரும். அது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியாகவும் இருக்கலாம் அல்லது காங்கிரஸ் ஆதரிக்கும் கூட்டணியாகவும் இருக்கலாம். பாரதீய ஜனதாவால் இனி தனித்து ஆட்சி அமைக்க முடியாது. அதற்கான வாய்ப்பு இல்லை.

எனக்கு பிரதமராக வேண்டும் என்று எந்த குறிக்கோளும் இல்லை. பிரதமராகும் ஆசையும் இல்லை. எனவே பிரதமர் பதவிக்கு போட்டியிட மாட்டேன்.

ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருப்பது அவரது சொந்த வி‌ஷயம். காங்கிரஸ் கட்சியும் தனியாக அவரை பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்துகிறது. மேலும் பிரதமர் வேட்பாளர் தொடர்பாக விவாதம் நடத்த காங்கிரஸ் விரும்புகிறது. தேர்தலில் கூட்டணி கட்சிகள் பெறும் தொகுதிகளின் அடிப்படையிலேயே பிரதமர் பதவி முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்