10% இடஒதுக்கீடு தேர்தல் வித்தை - காங்கிரஸ் விமர்சனம்

10 சதவீத இடஒதுக்கீடுக்கு மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்ததை தேர்தல் வித்தையென காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.

Update: 2019-01-07 12:18 GMT
பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட பிரிவினருக்கு கூடுதலாக 10% இட ஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. 

5 மாநில தேர்தல்களில் பா.ஜனதா 3 மாநிலங்களில் ஆட்சியை இழந்தது. அக்கட்சியின்  செல்வாக்கு கணிசமாகக் குறைந்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட பிரிவினருக்கு
 
10 சதவீத இட ஒதுக்கீடுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்நிலையில் இது தேர்தல் வித்தையாகும் என காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.  2019 பாராளுமன்றத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும் நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது என காங்கிரஸ் விமர்சனம் செய்கிறது.

4 வருடங்கள், 8 மாதங்கள் ஆட்சி செய்த போது இதுபற்றி ஏன் நினைக்கவில்லை? தேர்தல் நடைபெறுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர், இது வித்தை காட்டும் நடவடிக்கையாகும் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி விமர்சனம் செய்துள்ளார். இதுவரையில் பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு எந்த வகையிலும் இடஒதுக்கீடு அளிக்கப்படவில்லை. இப்போது கொண்டு வரும் இடஒதுக்கீடை அமல்படுத்த அரசியலமைப்பு சட்டம் 15, 16 பிரிவில் சட்டத்திருத்தம் கொண்டு வருவது அவசியமாகும். வியாழன் அன்று மாற்றம் கொண்டு வருவது தொடர்பான மசோதாவை அரசு கொண்டு வரலாம் என தெரிகிறது.

இந்நிலையில் அரசியலமைப்பு திருத்தம் கொண்டுவர மத்திய அரசுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளதா? என்றும் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும் செய்திகள்