சுப்ரீம் கோர்ட்டில் ராமஜென்ம பூமி வழக்கை 5 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும் - நாளை விசாரணை தொடங்குகிறது

சுப்ரீம் கோர்ட்டில் ராமஜென்ம பூமி வழக்கை 5 நீதிபதிகள் அமர்வு விசாரிக்க உள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை நாளை தொடங்குகிறது.

Update: 2019-01-08 23:15 GMT
புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி நகரில் உள்ள சர்ச்சைக்குரிய ராமஜென்மபூமி தொடர்பான வழக்கில் கடந்த 2010-ம் ஆண்டு அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது. அதில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அஹாரா, ராம் லல்லா ஆகிய 3 தரப்பினரும் சரிசமமாக பிரித்துக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் 14 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, 2019 ஜனவரி முதல் வாரம் உரிய அமர்வு விசாரிக்கும் என்று தெரிவித்தது. பின்னர் இதை அவசர வழக்காக விசாரிக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இதை ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது.

இதுபற்றி கடந்த 4-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு கூறுகையில், ஜனவரி 10-ந் தேதி இந்த வழக்கை உரிய அமர்வு விசாரிக்கும் என்று தெரிவித்தது. எனினும் இந்த அமர்வில் இடம் பெறும் நீதிபதிகள் பற்றிய விவரம் வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில் இந்த வழக்கை விசாரிக்கும் அரசியல் சாசன அமர்வை சுப்ரீம் கோர்ட்டு நேற்று அமைத்தது. இதுபற்றிய அறிவிப்பு சுப்ரீம் கோர்ட்டு இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது. அதில் நாளை (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு ராமஜென்மபூமி வழக்கை, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. நாளை முதல் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறும்.

இந்த அமர்வில் நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, என்.வி.ரமணா, யு.யு.லலித், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோரும் இடம்பெறுகிறார்கள்.

மேலும் செய்திகள்