காஷ்மீர் பனிச்சரிவுக்குள் சிக்கியவர்களில் 3 பேர் பலி 7 பேரை மீட்கும் பணி தீவிரம்

காஷ்மீர் பனிச்சரிவுக்குள் 10 பேர் சிக்கி இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதில் 3 பேர் உடல் மீட்கப்பட்டு உள்ளது. மற்றவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2019-01-18 08:47 GMT
ஜம்மு:

காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது.

நேற்று காஷ்மீரில் வட மாவட்டங்களில் பனிப்பொழிவு சீற்றம் அதிகமாக இருந்தது. இதையடுத்து பனிச்சரிவு ஏற்படலாம் என்று வானிலை இலாகா எச்சரிக்கை விடுத்து இருந்தது.

காஷ்மீரில் உள்ள அனந்தநாக், பாட்கம், பாரமுல்லா, பந்தீப்போரா, கண்டர்பால், கார்கில், குல்கான், குப்வாரா மற்றும் லே ஆகிய 9 மாவட்டங்களிலும் பனிச்சரிவு ஏற்படும் ஆபத்து இருப்பதாக நேற்று வானிலை இலாகா கூறி இருந்தது. அதுபோல கடும் குளிரும் நிலவும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் இன்று காலை லே மாவட்டத்தின் பல பகுதிகளில் திடீர் பனிச்சரிவு ஏற்பட்டது. அங்குள்ள லடாக் பகுதியில் கர்துங்லா நெடுஞ்சாலையில் பனிக்கட்டிகள் விழுந்தன.

பனிச்சரிவுகளில் ஒரு சொகுசு வாகனம் சிக்கிக்கொண்டது. அதில் இருந்த 10 பேர் பனிச்சரிவுக்குள் சிக்கி இருப்பதாக தெரிய வந்துள்ளது. தொடர்ந்து அந்த பகுதியில் பனிச்சரிவுகள் இருப்பதால் அந்த பகுதிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

பனிச்சரிவு ஏற்பட்டுள்ள கர்துங்லா பகுதி காஷ்மீர் மலைப்பகுதிகளில் இருக்கும் மிக உயரமான சாலைகளில் ஒன்றாகும். இந்த சாலை சையோக்-நுப்ரா பள்ளத்தாக்குகளை இணைக்கும் பாதை ஆகும். அங்கு செல்ல கடும் சவால் நிலவுகிறது.

பனிச்சரிவுகளில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணியில் உள்ளூர் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ராணுவத்தினரும் உதவி வருகின்றனர்.  மீட்பு பணியில் 3 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. 7 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்