சபரிமலையில் மீண்டும் பதற்றம்: அய்யப்பன் கோவிலுக்கு வந்த 2 பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் - கோவில் நடை இன்று சாத்தப்படுகிறது

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வந்த 2 பெண்கள் போலீசாரால் திருப்பி அனுப்பப்பட்டனர். கோவில் நடை இன்று சாத்தப்படுகிறது.

Update: 2019-01-19 22:45 GMT
சபரிமலை,

சபரிமலை அய்யப்பன் கோவில் மகரவிளக்கு, மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் 17-ந் தேதி திறக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் 10-50 வயதுக்கு இடைப்பட்ட பெண்கள் சபரிமலை கோவிலுக்கு வந்ததால் இந்து அமைப்புகளும், அய்யப்ப பக்தர்களும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே சமீபத்தில் கனகதுர்கா, பிந்து என்ற 2 பெண்கள் சபரிமலை கோவிலுக்கு சென்று வழிபட்டனர். இதைத்தொடர்ந்து கேரளாவில் மீண்டும் வன்முறை வெடித்தது. இதற்கிடையே கேரள அரசு இந்த மண்டல பூஜை காலத்தில் இதுவரை 51 பெண்கள் கோவிலுக்கு வந்ததாக சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.

இந்த தகவலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பிரமாண பத்திரத்தில் உள்ள பெயர்களில் இருக்கும் பல பெண்கள் 50 வயதை கடந்தவர்கள் என்றும், தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு பெயருக்கு சொந்தக்காரர் ஆண் என்றும் தகவல் வெளியானது. பா.ஜனதா, காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் பொய்யான தகவலை அரசு கோர்ட்டுக்கு தெரிவித்துள்ளதாக புகார் கூறினர்.

திருவாங்கூர் தேவசம்போர்டு உறுப்பினர் கே.பி.சங்கரதாஸ் கூறும்போது, “அரசு கூறியதற்கான ஆதாரம் தேவசம்போர்டில் இல்லை. அரசு கூறுவதற்கு ஆதாரம் இருந்தால் அந்த தகவலை நிராகரிக்க தேவையில்லை” என்றார்.

இந்நிலையில் நேற்று காலை கண்ணூரை சேர்ந்த சுமார் 35 வயதுள்ள ரேஷ்மா நிஷாந்த், ஷனீலா சஜேஷ் ஆகிய 2 பெண்கள் சபரிமலைக்கு வந்ததால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. பெண்கள் இருவரும் நிலக்கல் முகாமுக்கு காலை 5 மணி அளவில் வந்துசேர்ந்தனர். அவர்களை போலீசார் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவர்களிடம், கோவில் சந்நிதானத்தில் ஏராளமான பக்தர்கள் இருப்பதால் அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்பு உள்ளது. எனவே உங்களை கோவிலுக்கு அழைத்துச் செல்வதிலும், பாதுகாப்பு கொடுப்பதிலும் சிரமம் இருக்கிறது என்று போலீசார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.

அந்த பெண்கள் கூறும்போது, “நாங்கள் ஏற்கனவே கடந்த 16-ந் தேதி சபரிமலை வந்தோம். அப்போது எங்களை பார்த்த பக்தர்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்ததால் எங்கள் முடிவை கைவிட்டு திரும்பிச் சென்றோம். நாங்கள் 41 நாட்கள் விரதம் இருந்து கோவிலுக்கு வந்தோம். போலீசார் பெண்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று உறுதி கூறிவிட்டு, பின்னர் எங்களை ஏமாற்றிவிட்டார்கள்” என்றனர்.

இரவு 9.50 மணியுடன் தரிசனம் முடிவடைவதால் நேற்று காலையே அய்யப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பிவழிந்தது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை சில பூஜைகளுக்கு பின்னர் கோவில் நடை சாத்தப்படுகிறது. இதன்மூலம் கடந்த 2 மாதங்களாக அய்யப்ப பக்தர்கள் நடத்திவந்த போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வருகிறது.

மேலும் செய்திகள்