சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகரவிளக்கு, மண்டல பூஜை முடிந்ததை அடுத்து கோவில் நடை சாத்தப்பட்டது

சபரிமலையில் அய்யப்பன் கோவில் மகரவிளக்கு, மண்டல பூஜை முடிந்ததை அடுத்து கோவில் நடை சாத்தப்பட்டது.

Update: 2019-01-20 05:33 GMT
திருவனந்தபுரம்,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகரவிளக்கு, மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் 17-ந் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் 10-50 வயதுக்கு இடைப்பட்ட பெண்கள் சபரிமலை கோவிலுக்கு வந்ததால் இந்து அமைப்புகளும், அய்யப்ப பக்தர்களும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதற்கிடையே சமீபத்தில் கனகதுர்கா, பிந்து என்ற 2 பெண்கள் சபரிமலை கோவிலுக்கு சென்று வழிபட்டனர். இதைத்தொடர்ந்து கேரளாவில் மீண்டும் வன்முறை வெடித்தது. இதற்கிடையே கேரள அரசு இந்த மண்டல பூஜை காலத்தில் இதுவரை 51 பெண்கள் கோவிலுக்கு வந்ததாக சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.

இந்த தகவலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.   இந்நிலையில், மகரவிளக்கு, மண்டல பூஜை முடிவடைந்ததை தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை சில பூஜைகளுக்கு பின்னர் கோவில் நடை சாத்தப்பட்டது. 

மீண்டும்  மாத பூஜைக்காக பிப்ரவரி 12-ம் தேதி மாலை 5 மணிக்கு ஐயப்பன் கோயில் நடை மீண்டும் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களாக அய்யப்ப பக்தர்கள் நடத்தி வந்த போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வருகிறது.

மேலும் செய்திகள்