நிதி மோசடி வழக்கில் ராபர்ட் வதேராவை கைது செய்ய தடை - இடைக்கால ஜாமீன் வழங்கி டெல்லி கோர்ட்டு உத்தரவு

நிதி மோசடி வழக்கில் ராபர்ட் வதேராவை 16-ந்தேதி வரை கைது செய்ய தடை விதித்து டெல்லி சிறப்பு கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.

Update: 2019-02-02 22:15 GMT
புதுடெல்லி,

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மைத்துனரும், சோனியாவின் மருமகனுமான ராபர்ட் வதேரா பல்வேறு ரியல் எஸ்டேட் நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவர் இங்கிலாந்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை வாங்கி குவித்து இருப்பதாக கூறப்படுகிறது.

இதில் லண்டனின் பிரன்யன் சதுக்கத்தில் ராபர்ட் வதேராவுக்கு சொந்தமானதாக கூறப்படும் 1.9 மில்லியன் பவுண்டு (சுமார் ரூ.17 கோடி) மதிப்புடைய சொத்து வாங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக வதேராவுக்கு எதிராக நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கில் வதேராவின் நிறுவன ஊழியரான மனோஜ் அரோரா மீதும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அவரை வருகிற 6-ந்தேதி வரை கைது செய்ய டெல்லி சிறப்பு கோர்ட்டு தடை விதித்து உள்ளது.

இந்த நிலையில் தன் மீது அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கில் முன்ஜாமீன் கேட்டு டெல்லி சிறப்பு கோர்ட்டில் ராபர்ட் வதேரா மனுத்தாக்கல் செய்தார். சட்டத்தை மதிக்கும் குடிமகனான தன்மீது வேண்டுமென்றே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.

இந்த மனு, நீதிபதி அரவிந்த் குமார் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராபர்ட் வதேராவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கினார். அவரை 16-ந்தேதி வரை கைது செய்ய தடை விதிப்பதாக தனது உத்தரவில் அவர் கூறினார்.

எனினும் அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கு விசாரணைக்கு வதேரா முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனக்கூறிய நீதிபதி, இதற்காக 6-ந்தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக வதேராவின் அலுவலகங்கள் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்