சிபிஐ பா.ஜனதாவின் தேர்தல் ஏஜெண்டாக பயன்படுத்தப்படுகிறது -அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

சிபிஐ பா.ஜனதாவின் தேர்தல் ஏஜெண்டாக பயன்படுத்தப்படுகிறது என அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2019-02-04 09:43 GMT
லக்னோ, 

2019 பாராளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் ஆட்சியின்போது நடந்த சுரங்க மோசடி மற்றும் மாயாவதியின் ஆட்சியின் போது  நினைவு மண்டபங்கள் அமைக்கப்பட்டதில் ஊழல் நடந்தது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு அதிரடி சோதனை நடத்தியது. இதேபோன்று மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற சாரதா நிதி நிறுவன மோசடி விசாரணையும் இப்போது தீவிரம் அடைந்துள்ளது. இதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.

இந்நிலையில் சிபிஐ பா.ஜனதாவின் தேர்தல் ஏஜெண்டாக பயன்படுத்தப்படுகிறது என அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.

சிபிஐக்கு எதிராக மம்தா பானர்ஜி போராட்டம் மேற்கொண்டுள்ளது இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இவ்விவகாரத்தில் மம்தா பானர்ஜிக்கு அகிலேஷ் யாதவ் ஆதரவு கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், “எப்படியாவது ஆட்சியிலிருக்க வேண்டும் என்று பா.ஜனதா விரும்புகிறது. பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்து விடுவோம் என அச்சம் கொண்டுளனர். எனவே அவர்கள் சிபிஐயை அரசியல் ஏஜெண்டாக பயன்படுத்துகிறார்கள். அரசியலுக்காக சிபிஐ அமைப்பை பயன்படுத்தக்கூடாது” என கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்