தமிழகத்தை தொடர்ந்து ஆந்திராவிலும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு

ஆந்திராவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ள பிரதமர் மோடிக்கு எதிராக சாலையில் கண்டனம் தெரிவிக்கும் பதாகைகள் வைக்கப்பட்டு உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2019-02-09 15:55 GMT
ஆந்திராவுக்கு பிரதமர் மோடி நாளை பயணம் மேற்கொள்கிறார்.  அங்கு ரூ.6,825 கோடி மதிப்பிலான இரு பெட்ரோலியம் மற்றும் வாயு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

இதேபோன்று நெல்லூரில் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் கடலோர முனையம் அமைப்பதற்கான அடிக்கல்லையும் அவர் நாட்டுகிறார்.  இது ரூ.2,280 கோடி மதிப்பில் கட்டப்படும்.  இதன்பின்னர் அவர் பாரதீய ஜனதா கட்சியின் பொது கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

பிரதமர் மோடியின் வருகைக்கு எதிராக ஆந்திராவின் பல்வேறு இடங்களில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஊர்வலங்களை நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், கன்னவரம் விமான நிலையத்திலிருந்து விஜயவாடா வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பதாகைகள் வைக்கப்பட்டு உள்ளன.  அவற்றில் பொதுமக்கள் புஜங்களை உயர்த்திபடி விரட்டுவதும், பிரதமர் ஓடுவது போன்றும் அதன்மேல் ஆங்கிலத்தில் மோடி மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாது என்பன போன்றும் வாசகங்கள் எழுதப்பட்டு உள்ளன.

பிரதமர் மோடி நாளை பயணம் மேற்கொண்டு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க ஆந்திராவுக்கு வரவுள்ள சூழலில், இந்த பதாகைகளை இங்கு வைத்தது யார் என்று தெரியாத நிலை ஏற்பட்டு உள்ளது.  தமிழகத்திற்கு பிரதமர் வருகை தந்தபொழுது ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் அவருக்கு எதிராக கருப்பு கொடி காட்டின.

இந்த நிலையில், ஆந்திராவில் அவருக்கு எதிராக பதாகைகள் வைக்கப்பட்டு உள்ளன.  இதனால் அவற்றை அங்கிருந்து நீக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்