மாநில அரசின் உரிமைகளை பறிப்பதில் காங்கிரஸ் அரசுக்கும் பாஜக அரசுக்கும் எந்த வித்தியாசமுமில்லை -தம்பிதுரை ஆவேசம்

மாநில அரசின் உரிமைகளை பறிப்பதில் காங்கிரஸ் அரசுக்கும் பாஜக அரசுக்கும் எந்த வித்தியாசமுமில்லை என மத்திய அரசு மீது தம்பிதுரை குற்றஞ்சாட்டினார்.

Update: 2019-02-11 07:40 GMT
புதுடெல்லி

வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் அ.தி.மு.க.- பா.ஜனதா தலைமையில் கூட்டணி உருவாக உள்ளது. இந்த நிலையில் 
மக்களவையில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆவேசமாகபேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இடைக்கால பட்ஜெட் மத்திய, மாநில அரசுகளை பாதிக்கும் வகையில் உள்ளது. தேர்தலை மனதில் வைத்து பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தேர்தல் அறிக்கைபோன்று உள்ளது.

விவசாயிகளுக்கு குறைந்தது 12 ஆயிரம் ரூபாயாவது வழங்க வேண்டும். தற்போது அறிவித்த சலுகைகளை ஏன் 2018 ஆம் ஆண்டு அறிவிக்கவில்லை

வேலைவாய்ப்பை அதிகரிக்க மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அருண் ஜெட்லி கூறினார், ஆனால் வேலைவாய்ப்பை பெருக்க மத்திய அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பதை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 5 ஆண்டுகளில் வேலைவாய்ப்பை அதிகரிக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை, 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பு திண்டாட்டம் அதிகரித்துள்ளது.

ஜிஎஸ்டி  மூலம் மத்திய அரசு மாநில அரசின் அதிகாரத்தை பறித்து உள்ளது. ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வ்ழங்குவதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் எப்படி உயரும்.

மத்தியரசின்  பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் என்ன நன்மை கிடைத்தது. மாநில அரசுக்கு தரவேண்டிய நிலுவை தொகையை  மத்திய அரசு தரவில்லை. இதுதான் கூட்டாட்சி தத்துவமா?  ஜெயலலிதா காலம் முதலே மாநில அரசுக்கு வரவேண்டிய நிதியை மத்திய அரசு வழங்கவில்லை.  மாநில அரசுக்கு மத்திய அரசு ரூ. 10 ஆயிரம் கோடிவரை தர வேண்டி உள்ளது. மாநில அரசின் உரிமைகளை பறிப்பதில் காங்கிரஸ் அரசுக்கும் பாஜக அரசுக்கும் எந்த வித்தியாசமுமில்லை என கூறினார். 

தம்பிதுரை எம்.பியின் பேச்சுக்கு பாரதீய ஜனதா எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினர்.

மேலும் செய்திகள்