நாடு முழுவதும் உள்ள ஜம்மு காஷ்மீர் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்: உச்சநீதிமன்றம்

நாடு முழுவதும் உள்ள ஜம்மு காஷ்மீர் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-02-22 06:12 GMT
புதுடெல்லி,

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14-ந்தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் துணை ராணுவ வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.  இந்த தாக்குதலால் கோபம் அடைந்த பொதுமக்களால், நாட்டின் பிற பகுதிகளில் வசிக்கும் காஷ்மீர் மாநிலத்தவர்கள் சிலர் தாக்கப்பட்டனர்.  குறிப்பாக வெளி மாநில கல்லூரிகளில் படிக்கும் காஷ்மீர் மாணவர்கள் மீது தாக்குதல் சம்பவம் அதிகரித்ததாக செய்திகள் பரவின. 

இந்நிலையில், வழக்கறிஞர் சத்யா மித்ரா மூலம் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள், பல்வேறு கல்வி நிறுவனங்களில் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர்.  அவற்றைத் தடுக்கும் வகையிலான வழிமுறைகளைக் கல்வி நிறுவன அதிகாரிகளுக்கு மத்திய அரசு வழங்க வேண்டுமாறு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், காஷ்மீர் மாணவர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள், தாக்குதல்கள் மற்றும் சமூக புறக்கணிப்பு ஆகியவற்றை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 11 மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் டிஜிபிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்