சி.பி.ஐ. இணை இயக்குனருக்கு மேற்கு வங்காள போலீசார் ‘சம்மன்’

சி.பி.ஐ. இணை இயக்குனருக்கு மேற்கு வங்காள போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

Update: 2019-02-22 22:00 GMT
கொல்கத்தா,

மேற்கு வங்கத்தை சேர்ந்த மில் அதிபர் மீதான வழக்கு ஒன்றில், அந்த நிறுவனத்தில் பணியாற்றி வரும் தொழிலாளி ஒருவரை சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் கைது செய்தனர். பின்னர் விசாரணைக்காக அவரை அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாக தெரிகிறது.

இது தொடர்பாக கொல்கத்தாவின் பவானிபூர் போலீஸ் நிலையத்தில் கடந்த மாதம் மில் தொழிலாளி புகார் செய்தார். தனக்கு தொடர்பு இல்லாத வழக்கில் கைது செய்து, சித்ரவதை செய்ததாக அவர் குற்றம் சாட்டினார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கில் தற்போது சி.பி.ஐ. இணை இயக்குனர் ஸ்ரீவத்சவாவுக்கு கொல்கத்தா போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக 7 நாட்களுக்குள் விசாரணை அதிகாரி முன் ஆஜராகுமாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

ஒரு மாதத்துக்கு முந்தைய வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிக்கு போலீசார் சம்மன் அனுப்பிய விவகாரம் மேற்கு வங்காளத்தில் சி.பி.ஐ. அதிகாரிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. முன்னதாக சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பான வழக்கிலும் மாநில போலீசாருக்கும், சி.பி.ஐ. அதிகாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்