காஷ்மீர் பிரிவினைவாத இயக்க தலைவர் கைது

காஷ்மீர் பிரிவினைவாத இயக்க தலைவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-02-23 21:15 GMT
ஸ்ரீநகர்,

காஷ்மீர் புலவாமாவில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தினர் நடத்திய தாக்குதலில் 40 மத்திய ஆயுதப்படை வீரர்கள் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து மத்திய உள்துறை உத்தரவின்பேரில் காஷ்மீரில் உள்ள பிரிவினைவாத இயக்க தலைவர்கள் வீடுகளுக்கு வழங்கப்பட்டுவந்த போலீஸ் பாதுகாப்பை மாநில அரசு விலக்கிக்கொண்டது. காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 35-ஏ சட்டப்பிரிவுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை (திங்கட்கிழமை) விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்காரணமாக காஷ்மீரில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் நேற்று முன்தினம் இரவு முழுவதும் திடீர் சோதனை நடத்தி மாநிலத்தில் உள்ள காஷ்மீர் பிரிவினைவாத இயக்கங்களை சேர்ந்த தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளை கைது செய்தனர். இதில் ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் முகமது யாசின் மாலிக், ஜமாத் இ இஸ்லாமி இயக்க தலைவர் அப்துல் ஹமீது பயாஸ், செய்திதொடர்பாளர் ஷாகித் அலி, முன்னாள் பொதுச் செயலாளர் குலாம் காதிர் உள்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தவிர இதற்கு முன்பு பாதுகாப்பு படையினர் மீது கல்வீசியவர்கள், பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தியவர்கள் என சுமார் 150 பேர் வரை கைது செய்யப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை காரணமாக கூடுதலாக 100 கம்பெனி (10 ஆயிரம் பேர்) துணை ராணுவ படையினர் காஷ்மீருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்