பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல்: விமானப்படைக்கு ஆர்.எஸ்.எஸ். பாராட்டு

பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய இந்திய விமானப்படைக்கு ஆர்.எஸ்.எஸ். பாராட்டு தெரிவித்தது.

Update: 2019-03-08 20:51 GMT
குவாலியர்,

காஷ்மீரில் துணை ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. விமானப்படையின் இந்த வீரமிக்க செயலுக்கு நாடு முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அந்த வகையில் ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் விமானப்படைக்கு புகழாரம் சூட்டியுள்ளது.

இந்த அமைப்பின் 3 நாள் அகில பாரதிய பிரதிநிதி சபா நிகழ்ச்சி மத்திய பிரதேசத்தின் குவாலியர் நகரில் நேற்று தொடங்கியது. இதில், பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை குண்டுவீசி தகர்த்த விமானப்படைக்கு பாராட்டு தெரிவித்தும், இந்த முடிவை எடுத்த மோடி அரசுக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புலவாமா மற்றும் பல்வேறு இடங்களில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் உயிரிழந்த பாதுகாப்பு படையினருக்கு இந்த கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டதுடன், இந்தியாவின் சகிப்புத்தன்மையை பலவீனமாக கருதக்கூடாது என பயங்கரவாத அமைப்புகளுக்கு எச்சரிக்கை விடுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், பையாஜி ஜோஷி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் பிரதிநிதி சபாவை சேர்ந்த 1,400-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்