மும்பையில் நடைமேம்பாலம் விழுந்தது “சத்தம்தான் கேட்டது, எதையும் பார்க்க முடியவில்லை,” நேரில் பார்த்தவர் பேட்டி

மும்பையில் நடைமேம்பாலம் விழுந்து விபத்துக்குள் சிக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2019-03-14 16:04 GMT

மும்பையில் மிகவும் பரபரப்பான சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையம் அருகே உள்ள மேம்பாலம் மாலையில் இடிந்து விழுந்தது. சாலைக்கு மேலாக ரெயில் நிலையத்திற்கு செல்லும் வகையிலான பாலம் பகுதியாக இடிந்து விழுந்தது. பாலத்தின் இரும்பு கம்பிகள், தளங்கள் மொத்தமாக விழுந்துள்ளது. மிகவும் பரபரப்பான வேளையில் இச்சம்பவம் நடைபெற்ற போது, அதில் சென்று கொண்டிருந்த பயணிகள் விழுந்தனர். மேம்பாலம் விழுந்ததில் அப்பகுதியே புகை மூட்டமாகியுள்ளது. 

காயம் அடைந்தவர்கள் உதவியை கேட்டு அலறியுள்ளனர். உடனடியாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் உதவி செய்துள்ளனர். இடிபாடுகளுக்கு சிக்கியவர்களை மீட்டனர். போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தேசிய பேரிடர் மீட்பு படையினரும் விரைந்தனர். உடனடியாக அப்பகுதிக்கு ஆம்புலன்ஸ் வரவில்லை. பின்னர் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 30க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களில் 4 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே மேம்பாலம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த பாலத்தில் காலையில் பயணிகளை அனுமதித்தவாறே பராமரிப்பு பணிகள் நடைபெற்று உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் பேசுகையில், “பெரும் சத்தம்தான் கேட்டது, அருகே சென்றபோது பாலம் இடிந்து புகையாக காட்சியளித்தது. 2 நிமிடங்கள் எதையும் பார்க்க முடியவில்லை. சில நிமிடங்கள் கழித்து 15-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து துடிப்பதை பார்த்தோம். அவர்களை உடனடியாக மீட்டோம்” என கூறினார். 

மேலும் செய்திகள்