மனோகர் பாரிக்கர் உடல்நிலை மோசம் அடைந்துள்ளதாக தகவல்: பாஜக தலைவர்கள் கோவா விரைந்தனர்

கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் உடல்நிலை மோசம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Update: 2019-03-17 07:28 GMT
பானஜி,

கோவா முதல் மந்திரியாக பதவி வகித்து வரும் மனோகர் பாரிக்கர், கணைய அழற்சி நோயால் அவதிப்பட்டு வருகிறார். இதற்காக வெளிநாடுகளில் சிகிச்சை பெற்ற மனோகர் பாரிக்கர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றார். இந்த நிலையில், மனோகர் பாரிக்கரின் உடல் நிலை மிகவும் மோசம் அடைந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இதற்கு மத்தியில் ஆட்சி அமைக்க கோரி காங்கிரஸ் கட்சி உரிமை கோரியுள்ளது. பாஜகவின் பெரும்பான்மை இல்லை எனவும் கூறியுள்ள காங்கிரஸ் இது தொடர்பாக கவர்னர் மிருதுளா சின்காவுக்கு கடிதம் எழுதியுள்ளது.  பாஜக எம்.எல்.ஏ பிரான்ஸிஸ் டி சோசா சமீபத்தில் மரணம் அடைந்தார். இவரது மறைவையடுத்து பாஜகவுக்கு பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கை இல்லை என்று எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. 

இந்த நிலையில், பாஜக மூத்த தலைவர்கள் கோவா விரைந்துள்ளனர். மனோகர் பாரிக்கருக்கு பதிலாக புதிய முதல் மந்திரி யார் என்பதை முடிவு செய்யும் பணியில் பாஜக மூத்த நிர்வாகிகள் ஈடுபடுவார்கள் என்று பரவலாக தகவல்கள் பரவுகின்றன. இன்று மாலை பாஜக எம்.எல்.ஏக்களின் கூட்டம் நடைபெறலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சூழலில், எம்.எல்.ஏக்களில் ஒருவரை மட்டுமே புதிய முதல்வராக தேர்வு செய்ய வேண்டும் என்று கோவா மாநில பாஜக எம்.எல்.ஏக்கள் அக்கட்சி தலைமையிடம் தெரிவித்துள்ளனர். 

கோவா செல்லும் பாஜக மூத்த நிர்வாகிகள் இன்று கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்தும் ஆலோசனை நடத்துவார்கள் என்று தெரிகிறது. இதன்காரணமாக கோவா அரசியல் களத்தில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. 

மேலும் செய்திகள்