லண்டனில் நிரவ் மோடி கைது - இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வரவேற்பு

லண்டனில் நிரவ் மோடி கைது செய்யப்பட்ட சம்பவத்தை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வரவேற்றுள்ளது. #NiravModi #RaveeshKumar

Update: 2019-03-20 19:00 GMT
புதுடெல்லி,

குஜராத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலம் சுமார் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று விட்டு திருப்பி செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டார்.  இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுபற்றிய விசாரணை தொடங்குவதற்கு முன்பே நிரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தினர் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிவிட்டனர்.  இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிரவ் மோடியை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க சர்வதேச போலீசின் உதவியை மத்திய அரசு நாடியது. அதன்படி நிரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீசை சர்வதேச போலீசாரும் பிறப்பித்து உள்ளனர்.

இந்த வழக்கில் இங்கிலாந்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் நிரவ் மோடியை கைது செய்ய வாரண்ட் ஒன்றை கடந்த 18ந்தேதி பிறப்பித்தது. இதனை தொடர்ந்து லண்டன் போலீசார் நிரவ் மோடியை கைது செய்தனர். கைது நடவடிக்கையை தொடர்ந்து லண்டன் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீரவ் மோடி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை லண்டன் நீதிமன்றம் நிராகரித்தது. மேலும், அவரை வரும் 29-ந் தேதி ஆஜர்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த கைது நடவடிக்கையை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வரவேற்றுள்ளது. இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார், “ வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பிறப்பித்த கைது ஆணைக்கு இணங்க நிரவ்  மோடியை இங்கிலாந்து அதிகாரிகள் கைது செய்துள்ளதை வரவேற்கிறோம். நிரவ்  மோடியை விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்காக இங்கிலாந்தில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து இந்த விவகாரத்தை இந்திய அரசு தொடர்ந்து கண்காணிக்கும்” என்று கூறினார். 

மேலும் செய்திகள்